மோடியின் முதல் கையெழுத்து முதல் சுரேஷ் கோபி சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

விவசாயிகளுக்கு நிதி: மோடியின் முதல் கையெழுத்து: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி திங்கட்கிழமை தனது அலுவலகத்தில், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான தமது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். விடுவிக்கப்படும் ரூ.20,000 கோடி நிதியின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்தக் கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, “எங்களது அரசு விவசாயிகள் நலனில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பதாகும். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்” என்றார்.

3 கோடி வீடுகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், புதிய அரசின் முதல் முடிவாக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மேலும் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

“பிரிந்த சக்திகள் ஒன்றிணையாவிட்டால்...” - ஓபிஎஸ் எச்சரிக்கை: “பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையாவிட்டால், அதிமுக எந்தக் காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது,” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்: பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க விழா மற்றும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. அதில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று கூறினார்.

பேடிஎம் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை: பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் மறுகட்டமைப்பு சார்ந்த திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

ஜூலை 10-ல் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

சுரேஷ் கோபி திட்டவட்ட மறுப்பு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கேரள மாநிலத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். எனினும், பதவியேற்ற சில மணிநேரங்களில் மலையாள ஊடகங்களுக்கு அளித்த பேட்டியளித்த சுரேஷ் கோபி, “எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு. இதனை முன்கூட்டியே பாஜக தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். விரைவில் நான் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவேன் என நம்புகிறேன்” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் தவறானது. கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். பிரதமர் மோடி தலைமையில், கேரளா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அடைய உழைப்போம்” என்று சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் நடந்த ரியாஸி மாவட்டத்தில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு 2 கட்டங்களாக நடிகர் விஜய் பரிசு: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் 28-ம் தேதி மற்றும் ஜூலை 3-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடிகர் விஜய் பரிசு வழங்குகிறார் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

கண்கலங்கிய நசீம் ஷா... ஆறுதல் சொன்ன ரோகித்! நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை விளையாடின. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கலங்கி நின்ற நசீம் ஷாவின் முதுகில் தட்டிக் கொடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆறுதல் சொல்வது போன்ற படம் ஒன்று சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் ரோகித்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தப் படத்தை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரோகித்தின் உன்னத செயலை பாராட்டி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE