இந்த ஆண்டு, சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கான விருதுகளை ‘இந்தியா டுடே’ பத்திரிகை அறிவித்திருக்கிறது. இதில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. 2018, 2019, 2020 எனத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த விருதை வென்ற தமிழகம் இந்த ஆண்டும் இந்த விருதைக் கைப்பற்றியிருக்கிறது.
பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயலாற்றிய பெரிய மாநிலத்துக்கான விருதைத் தெலங்கானா பெற்றிருக்கிறது. சுகாதாரம், சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சிறந்த மாநிலமாகக் கேரளம் தேர்வாகியிருக்கிறது. விவசாயம், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டதாக விருதுக்குத் தேர்வாகியிருக்கும் பஞ்சாப், சுற்றுலாத் துறையில் பெரும் முன்னேற்றம் கண்ட பெரிய மாநிலம் எனும் அங்கீகாரத்தையும் அடைந்திருக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான விருது ஆந்திரத்துக்கு வழங்கப்படுகிறது. நிர்வாகத் துறை விருது ராஜஸ்தானுக்கும், சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்ட பெரிய மாநிலம் எனும் விருது குஜராத்துக்கும், தொழில்முனைவுக்கான விருது ஹரியாணாவுக்கும் வழங்கப்படுகின்றன. கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பெரிய மாநிலத்துக்கான விருதுகள் இமாசல பிரதேசத்துக்குக் கிடைத்திருக்கின்றன.
இப்படிப் பல்வேறு பிரிவுகளில் பல மாநிலங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.