குட்டைப் பாவாடையை மாற்றுங்கள், ஆசிரியைகளை நியமியுங்கள்!

By கே.எம்.கபிலன்

அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த சபரிமாலா, நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், தனது அரசுப் பணியையும் ராஜினாமா செய்தவர். நீட்டுக்கு எதிரான பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகிறார். பள்ளி மாணவிகளுக்குக் குட்டைப் பாவாடைச் சீருடை வேண்டாம் என்றும், மாணவிகளுக்கு ஆசிரியைகளைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் பேசிவருபவர். தற்போது பள்ளிகளில் அதிகரித்திருக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான அவரது கருத்துகள் பரவலாகக் கவனத்தைப் பெற்றுவருகின்றன. ‘காமதேனு’வுக்காக அவரிடம் பேசினோம்.

எள்ளேரி நடுநிலைப் பள்ளியில் ஆரம்பித்த உங்கள் பணி, தற்போது எங்கே போய் நிற்கிறது?

அடிப்படைக் கல்வியில் ஆரம்பித்தது, நீட் தேர்வுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, இப்போது மேலும் பல விஷயங்களுக்காக விரிவடைந்திருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தீவிரமான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும், எதற்குமே தற்கொலை தீர்வாகாது; அதற்கு மாற்றுவழி நிறைய இருக்கிறது என்பதையும் மாணவர்களிடம் எடுத்துக்கூறி வருகிறேன். பள்ளி - கல்லூரிகளில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன்.

நீட்டுக்கு எதிரான உங்கள் போராட்டம் எப்படி இருக்கிறது?

அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நாங்களும் காத்திருக்கிறோம். நீட் இருக்கும் வரைக்கும் ஒருபோதும் ஏழைக் குழந்தைகள் மருத்துவராக முடியாது. நீட்டுக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறோம். நீட்டுக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதையும் மாணவர்களிடம் உணர்த்திக்கொண்டிருக்கிறோம்.

நீட் மட்டும் அல்ல, தாங்கள் விரும்பும் சாதியக் கொள்கை, மதக் கொள்கை இப்படிப் பலவற்றையும் நிலைநிறுத்துவதற்காகக் கல்வித் திட்டத்தில் இன்னும் என்னென்னவோ கொண்டுவருவார்கள். எல்லாவற்றையும் எதிர்த்து நின்று போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது என்பதை மாணவர்களிடம் எடுத்துச்சொல்லி வருகிறேன். இதன் காரணமாக, கண்ணுக்குத் தெரியாமல் லட்சக்கணக்கான பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து மாணவர்களைச் சந்தித்து வருகிறீர்கள். பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களின் நிலை எப்படி இருக்கிறது?

ஆண்ட்ராய்டுக்கு முன், ஆண்ட்ராய்டுக்குப் பின் என்று இரண்டாகப் பிரிந்திருக்கிறது. ஆண்ட்ராய்டுக்குப் பின்னர் மோசமான மனநிலை பிள்ளைகளிடம் கொண்டுவந்து திணிக்கப்பட்டிருக்கிறது. எல்லோர் கையிலும் மொபைல் போன், அதிலிருந்து சர்வசாதாரணமாக யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். ஒரு பதின்பருவப் பெண்ணை அவளது ஆசிரியரோ, பக்கத்துத் தெருவில் இருக்கிறவரோ, பின்தொடர்பவனோ, சக மாணவனோ சுலபமாகத் தொடர்புகொண்டு விடமுடிகிறது. தற்கொலை செய்துகொண்ட கோவை மாணவியையும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தித்தான் அந்த ஆசிரியர் தொடர்புகொண்டிருக்கிறார்.

இதற்கு என்ன தீர்வு?

பதின்பருவத்தில் இருக்கிற பிள்ளைகளுக்கு இதை எதிர்கொள்ளத் தெரியவில்லை. பெற்றோரிடம் முதலில் மறைக்கிறார்கள். கோவை மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருந்தால், எல்லாமும் அங்கேயே முடிந்திருக்கும். அவளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்காது. இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாள். இவ்விஷயத்தில் பிள்ளைகளிடம் விழிப்புணர்வு குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது.

இன்றைய காலத்தில், பிள்ளைகள் எல்லோரும் ஆசிரியரை ஆசிரியராகப் பார்க்காமல், நண்பராக நினைக்கிறார்கள். நல்ல ஆசிரியர்கள் அதை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு பிள்ளையிடம் ஆசிரியர் பேசினால், இன்னொரு பிள்ளை கோபித்துக்கொள்கிறது. இன்றைக்கு நாம் யாரையும் குறைசொல்ல முடியாது. பிள்ளைகளிடம் எதிர்பாலின ஈர்ப்பைக் கையாளத் தெரியாத சூழல் இருக்கிறது. அத்துடன் வக்கிரங்களும் இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. இதற்கான வகுப்பு, பாடத்திட்டம் எதுவும் நமது கல்விமுறையில் கிடையாது. இதைப் பற்றிப் பேச ஆசிரியர்களுக்கு நேரமும் கிடையாது. அதில் அவர்களுக்கு அக்கறையும் கிடையாது. இந்தச் சூழலில், தாங்கள் எதிர்கொள்ளும் அத்துமீறல்களை எதிர்கொள்ள முடியாமல் சில பிள்ளைகள் தற்கொலையை நாடிவிடுகிறார்கள்.

இவ்வளவையும் தடுக்க வேண்டுமென்றால், இப்போதைக்கு மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும், அவ்வளவுதான்!

பெண் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பதற்கான வலுவான வேறு காரணம் என்ன?

பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருக்கிற பள்ளிகளில், கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் எதுவும் வருவதற்கு துளிகூட வாய்ப்பில்லை. அதோடு ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைக்கும், அவர்களுடைய பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படும். அதேபோல இரு பாலர் கல்விமுறையை நிறுத்துங்கள். மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக வகுப்பறை நடத்துங்கள். முதல் வகுப்பிலிருந்து பள்ளி, கல்லூரி வரையிலும் பெண் பிள்ளைகளுக்குப் பெண் ஆசிரியர்கள் என்பதை உடனடியாக நிறைவேற்றுங்கள்.

அனைத்து மாணவிகளுக்கும் பெண் ஆசிரியர் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?

பெண் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இதைச் சாத்தியப்படுத்தித்தான் ஆக வேண்டும். எதை வேண்டுமானாலும் செய்து இதை சாத்தியப்படுத்தட்டும்.

ஏற்கெனவே நீங்கள் இப்படிப் பேசியதால், பிற்போக்குத்தனமாகப் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தனவே?

பெண் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாத துப்புகெட்ட இந்த நாட்டில் என்ன பிற்போக்கு, முற்போக்கு பேச்சு? முதலில் உயிரைக் காப்பாற்றுங்கள். பிறகு சமத்துவத்தைக் கொண்டுவரலாம், உரிமையைப் பேணலாம். அதற்குப் பிறகு ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றி விவாதிக்கலாம்.

பெண் பிள்ளைகளை தைரியம் ஊட்டி வளர்த்தால், அவள் எந்த ஆணுக்கும் பயப்படப் போவதில்லை. நாம் அதற்கான தைரியத்தைக் கொடுக்காமல் ஆண் பிள்ளைகளோடு பழகவும், படிக்கவும் வைத்தாலோ, பாலின சமத்துவம் பேசினாலோ எந்தப் பலனும் இல்லை. மாறாக விபரீதமான விளைவுகளைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் தடுப்பதற்கென நீங்கள் முன்வைக்கும் வேறு யோசனைகள் என்னென்ன?

பள்ளி, கல்லூரிகளில் குட்டைப் பாவாடை வேண்டாம். மாணவிகள் விருப்பப்பட்டால் அணிந்துகொள்ளட்டும். ஒரு கல்வி நிலையமோ, அரசோ அதைக் கட்டாயமாக்க வேண்டாம். கொஞ்சம் தளர்வான சுடிதார் போன்ற உடையைக் கட்டாயமாக்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கும் அதேபோல முழுக்கால் சட்டையைக் கட்டாயமாக்க வேண்டும்.

சினிமாக்களில் பள்ளிச் சீருடையில் காதல் செய்வதாகக் காட்டுகிறார்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள், டிக்டாக் போன்ற செயலிகள், ஆன்லைன் விளையாட்டுகள், பார்க்கக்கூடாத காணொலிகள் இவையெல்லாம் மாணவிகளுக்குச் செல்வதை, கிடைப்பதை முதலில் தடுக்க வேண்டும். குழந்தைகள் பார்க்கும் காணொலிக்கு இடையில்கூட பாலியல் காணொலிகள் வருகின்றன. அரசாங்கம் நினைத்தால் மட்டுமே இதையெல்லாம் தடுக்க முடியும்.

பள்ளிகளில் பாலியல் சீண்டல் வழக்குகள் குறித்த வழக்குகள் அதிகமாகிக்கொண்டே போவதன் காரணம் என்ன?

இதுவரையிலும் உள்ள வழக்குகளில் எந்தக் குற்றவாளியும் தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி நடந்திருந்தால், தற்போது இப்படியான குற்றங்கள் தொடர்ந்து நடக்க வாய்ப்பில்லை. அரசியல் தலையீடுகள், பணத்தைக் கொடுத்து வழக்கை முடிப்பது என்று இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. பணம் விளையாடுகிறது, சாதி, அரசியல், மதம் என்று அனைத்தும் குறுக்கிடுகின்றன.

அதனால், இதற்கு முன்னுள்ள வழக்குகளை விரைவாக நடத்தி உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டும். கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.

சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

வீடும், அதன் சுற்றுப்புறங்களும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. இந்த 2 ஆண்டுகளில் பெண்கள் அதிகமாக வீட்டைவிட்டு பணியிடத்திற்கோ, பள்ளி, கல்லூரிக்கோ செல்லவில்லை. பெரும்பாலும் பெற்றோர்களுடன் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆனால், 15 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் இந்தியாவில் பதியப்பட்டிருக்கின்றன. வழக்காகப் பதிவாகியிருப்பதே இவ்வளவு என்றால் வெளியில் தெரியாது எவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

மாணவிகளுக்குப் பெண் ஆசிரியர்கள் என்பதை முன்வைத்து, நீங்கள் இயக்கம் தொடங்கப்போவதாகச் சொல்லப்படுகிறதே?

ஆமாம். ‘பெண் குழந்தைகளுக்குப் பெண் ஆசிரியர்கள்’ என்கிற திட்டத்தை முன்வைத்து ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்க இருக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து பெற்றோர்களிடமும் அதில் கையொப்பம் பெற்று முதல்வரிடம் கொடுத்து இதை வலியுறுத்தப் போகிறேன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE