சு.வெங்கடேசன் எம்.பி-யை ஒருமையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு!

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை எம்பி சு.வெங்கடேசனை அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் பேசியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொதித்துப் போயுள்ளனர். மேலும், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு முறையிட்டு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

மதுரையில் ஸ்மார்ட்டி சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக, அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார். இதையொட்டி அந்தப் பேருந்து நிலையத்தைப் பார்வையிடுவதற்காக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மதுரை வந்திருந்தார்.

அப்போது, மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி ஒருவன் இருக்கிறான்; அவனிடம் கேளுங்கள்” என்று கூறியதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரையின் வளர்ச்சி குறித்த கேள்விக்கு, மதுரையில் வெங்கடேசன் என்கின்ற ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள் என்று ஒருமையில் பேசி அமைச்சர் நேரு பதிலளித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியைப் பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது. எனவே, தமிழக முதல்வர் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE