‘மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசு விரைவில் கவிழும்; மார்ச் மாதம் பாஜக அரியணையேறும்’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார், மத்திய அமைச்சரான நாராயண் ரானே.
ஜெய்ப்பூரில் இன்று(நவ.26) பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்த அமைச்சர் நாரயண் ரானே, அரசியல் குண்டு ஒன்றையும் வீசினார். அதன்படி ’சிவசேனை ஆட்சி கவிழ்கிறது; மார்ச்சில் பாஜக தலைமையிலான அரசு மாநிலத்தில் பொறுப்பேற்கிறது; மற்றது எல்லாம் தற்போதைக்கு ரகசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.
நாரயண் ரானேக்கும் சிவசேனாவுக்குமான உறவும் பகையும் ஊரறிந்தது. 38 ஆண்டு காலம் சிவசேனையில் இருந்த நாரயண் ரானே, சீனியர் தாக்கரே காலத்தில் கட்சியில் மிகவும் செல்வாக்குடன் இருந்தார். தலைமையை நோக்கி உத்தவ் தாக்கரே நகர்ந்ததும், அவருடனான கசப்பில் நாராயண் ரானே வெளியேறி காங்கிரசில் ஐக்கியமானார். அங்கிருந்து தனிக்கட்சி கண்டவர், பின்னர் அதை பாஜகவில் கரைத்ததில் மாநிலங்களவை எம்பியாகி, தற்போது மத்திய அமைச்சராகி இருக்கிறார்.
நாராயண் ரானேயின் நதிமூலம் காரணமாக, சிவசேனாவுடனான அவரது மோதல்களில் அனல் பறக்கும். அப்படி ஆகஸ்ட் மாதம் ‘ஆசி யாத்திரை’ நிகழ்வுக்காக ராய்கட் வந்தபோது, பெரும் சர்ச்சையில் சிக்கினார். கூட்டமொன்றில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, நாட்டின் சுதந்திர தினத்தை சரியாகக்கூற மறந்து தவித்ததை நினைவூட்டிய ரானே, ’நான் அருகில் இருந்திருப்பின் அவரை அறைந்திருப்பேன்’ என்றார்.
அவ்வளவுதான். சிவசேனா கொந்தளித்தது. மகாராஷ்டிரா காவல் நிலையங்கள்தோறும் ரானேவுக்கு எதிரான வழக்குகள் பதிவாக, அவர் கைதும் செய்யப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் கைதான மத்திய அமைச்சர் என தேசத்தின் அரசியல் வரலாற்றிலும் விநோதமாய் இடம்பிடித்தார்.
சிவசேனா தலைமையுடன் தொடரும் உரசலில், ஆட்சி கட்டாயம் கவிழும் என்றொரு அரசியல் அஸ்திரத்தை இம்முறை வீசியிருக்கிறார். ரானே காக்கும் ரகசியங்களுக்காக மகாராஷ்டிரா காத்திருக்கிறது!