மதுரை தமுக்கம் அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 55,000 பார்வையாளர்கள் வருகை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை பார்வையிட இதுவரை 55 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். சித்திரைத் திருவிழா நாட்களில் நடைபெறாததால் பார்வையாளர்கள் கடந்த காலத்தை விட குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழாவை காண, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் லட்சக் கணக்கில் வருகை தருவர். மேலும், தமிழகம் முழுவதும் தங்கியிருந்து பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வருவார்கள். திருவிழாவில் பங்கேற்கும் அவர்களுக்கான பொழுதுப் போக்கிற்காகவும், தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா நாட்களில் அரசு பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடக்கும்.

நடப்பாண்டு மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி, அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி தேர்தல் முடிந்ததும் தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் நிவேற்றப்படும் திட்டங்கள், அரசின் சாதனைகள், பொழுதுப்போக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், சித்திரைத்திருவிழா முடிந்தபிறகு இந்த கண்காட்சி நடைபெறவதால் கண்காட்சியில் விடுமறை நாட்களில் தவிர மற்ற நாட்களில் பெரியளவிற்கு கூட்டம் வருவதில்லை.

திருவிழா நாட்களில் நடைபெற்றிருந்தால் கண்காட்சியில் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது கடந்த காலத்தை ஒப்பிடும்போது அரசு பொருட்காட்சி போதியவிற்கு வரவேற்பு பெறவில்லை. அரசு தரப்பில் கூறும்போது, இதுவரை 55 ஆயிரம் பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட வந்துள்ளதாக கூறுகின்றனர். மொத்தம் 40 நாட்கள் திட்டமிட்டு இந்த கண்காட்சி தொடங்கப்பட்டதாகவும், இதுவரை 15 நாட்கள் நடைபெற்று இருப்பதாகவும், மீதமுள்ள 25 நாட்களில் இன்னும் மக்கள் அதிகமானோர் வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதானல், இனியாவது வரும் காலங்களில் சித்திரைத் திருவிழா நாட்களில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி அந்த நாட்களில் மட்டுமே நடத்த வேண்டும், மற்ற நாட்களில் தாமதமாக நடத்தக் கூடாது என்றும், தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் முன் கூட்டியே திட்டமிட்டிருந்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE