மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது இதுதான். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடியே அறிவித்துவிட்டார். ஆனபோதும் அவரது தீவிர அபிமானியான கங்கனா ரானவத் அடங்குவதாக இல்லை.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த கங்கனா, அவை வாபஸான பிறகும் தான் கொண்ட கொள்கையில் உடும்பாக நிற்கிறார். டெல்லி எல்லையில் போராடிய விவசாயிகளை தாக்கி வந்தவர், அங்கிருந்து ஒட்டுமொத்த சீக்கியர்களுக்கும் எதிராக திரும்பியது கங்கனாவுக்கு பூமாராங்கானது.
விவசாயிகள் போராட்டத்தில் பெரும்பான்மையாக பங்கேற்ற சீக்கியர்களை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என சித்தரித்தது, இந்திராகாந்தியை நினைவுகூர்ந்து சர்வாதிகாரம் கோரியது என கங்கனாவின் தனது பாணியிலான தாக்குதல்களில் மற்றுமொரு முறை மஞ்சள் கோடு தாண்டினார்.
பொறுத்துப்பார்த்த சீக்கிய குருத்வாரா நிர்வாகிகள் சிலர், மகாராஷ்டிராவின் மேற்கு கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாஜகவுக்கு அனுகூலமான ‘மத நம்பிக்கைகளை புண்படுத்துவது’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கங்கனாவுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வலம்வர ஆரம்பித்ததும், ’மற்றுமொரு நாள், மற்றுமொரு புகார்’ என்ற அலட்சிய பதிவுடன் தனது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கிறார். கங்கனாவுக்கு எதிரான புகாரை விட அந்த புகைப்படத்தை பகிர்பவர்கள் இப்போது அதிகமாகி விட்டனர். கங்கனாவின் திட்டமும் இதுதானோ?