தடுப்பூசியாளர்களுக்கு தள்ளுபடியில் ’சரக்கு’: ம.பி குழப்படி

By காமதேனு

இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு, தள்ளுபடி விலையில் மதுபானம் என மத்திய பிரதேசத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

கரோனா தடுப்பூசிகளை முழுமையாக மக்களிடம் சென்று சேர்ப்பதற்காக, ஆங்காங்கே கவர்ச்சிகரமான அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன. குலுக்கலில் பரிசு, பல்வேறு சலுகை கூப்பன்கள் மேலும் புத்தகம், சேலை போன்ற இலவச பரிசுகள் இதில் அடக்கம். மத்திய பிரதேசத்தில் சற்று மாற்றி யோசித்திருக்கிறார்கள்.

மத்திய பிரதேச அரசு நடப்பாண்டு இறுதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக மக்களிடம் சேர்த்துவிடுவது என்று தீர்மானத்துடன் களமிறங்கி உள்ளது. ஆனால் முன்புபோல கரோனா பரவல் அச்சம் இல்லாததில் முதல் டோஸ் உடன் தங்களது தடுப்பூசி ஆர்வத்துக்கு ம.பி மக்கள் முற்றும் போட்டிருக்கிறார்கள்.

எனவே சேவை அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க முடிவானது. அதில் ஒன்றாக இன்று(நவ.24) அறிவிப்பான ஒரு திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. உள்ளூர் மதுபான சரக்குகள் விற்பனையாகும் கடைகளின் வாயிலாக புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. அதன்படி இன்று முதல், கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டோர், அதற்கான சான்றினை காட்டி மதுவினை 10 சதவீத தள்ளுபடியோடு வாங்கிச் செல்லலாம். சில கடைகள் போட்டி காரணமாக கூடுதல் தள்ளுபடியையும் தந்து வருகின்றன.

இதனையடுத்து, தடுப்பூசி முகாம்களில் கணிசமாக கூட்டம் அதிகரித்தது. இதற்கு ஆளும் பாஜக சார்பிலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த திட்டம் குடியை ஊக்குவிப்பதாக இருப்பதுடன், தடுப்பூசி போட்ட சூட்டில் மது அருந்த தூண்டுவது தடுப்பூசியின் நோக்கத்தையே பாழாக்கும் என்பதாலும், இந்த அறிவிப்புக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏவான யஷ்பால் சிங் சிசோதியா போன்றோர் கண்டித்துள்ளனர்.

ஆனால் அதிசயமாய் அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வத்தை குலைக்க விரும்பாத மாநில அரசு அமைதி காக்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் தன்னிச்சையாக வெளியிடப்பட்ட அறிவிப்பாக கமுக்கம் பேணுகிறார்கள்.

முன்னதாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், மதுபான கடைகளுக்கு வருவோரிடம் ‘தடுப்பூசி போட்டுக்கொண்டதை வாய்வழி வாக்குமூலமாக உறுதிபடுத்துவோருக்கு மட்டுமே மது விற்பனை’ என்ற உத்தரவு கடந்த வாரம் அமலானது. இது குறித்து ஓர் உயரதிகாரி, ‘குடிப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்’ என பேட்டியளித்தது சர்ச்சையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE