கௌதம் கம்பீருக்கு ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ கொலை மிரட்டல்!

By எஸ்.எஸ்.லெனின்

முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரும் தற்போதைய பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு, ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்து டெல்லி அரசியலில் தீவிரமாக களமாடி வரும் கௌதம் கம்பீர், தற்போது கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும் பயங்கரவாதிகள் கொலைமிரட்டல் விடுத்திருப்பதாக, அவர் டெல்லி போலீஸாருக்கு நேற்று இரவு புகார் அளித்தார். அதையடுத்து அவரது டெல்லி இல்லத்துக்கு இன்று(நவ.24) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இம்ரான்கான்

கௌதம் கம்பீருக்கான கொலை மிரட்டல் பின்னணியில், அவரது இம்ரான்கான் தொடர்பான விமர்சனம் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

அண்மையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் கலகக்காரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது ஆதரவு அமைச்சர்கள் புடைசூழ பாகிஸ்தான் சென்றிருந்தார். சீக்கியத்தை நிர்மாணித்த குரு நானக்கின் 550-வது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது குருத்வாரா அமைந்திருக்கும் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூருக்கு சித்து உள்ளிட்டோர் சென்றனர். சீக்கியர்கள் மேற்கொள்ளும் இந்தப் புனிதப் பயணத்தை முன்னிட்டு, விசா இன்றி அவர்களை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டிருந்தார். மேலும் சர்வதேச எல்லையிலிருந்து பிரத்யேக சாலை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடுதலாக செய்யப்பட்டிருந்தன.

நவ்ஜோத் சிங் சித்து

சித்து தனது குருத்வாரா பயணத்தின்போது, அங்குள்ள ஊடகங்களுக்கு பாகிஸ்தான் பிரதமரின் உதவியைப் பாராட்டி பேட்டியளித்தார். அதில் இம்ரான்கானை ’அண்ணன்’(படா பாய்) என்று விளித்திருந்தார். இந்த வீடியோத் துணுக்கு இருதேசங்களிலும் வைரலாகி, கலவையான விமர்சனங்களை அள்ளியது. இதற்கு பாஜகவினர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த வகையில் பாஜக எம்பியான கௌதம் கம்பீர், “சித்து தனது மகன் மற்றும் மகளை பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்பட்டும். அதன் பின்னர் பயங்கரவாத தேசத்தின் தலைவரை அண்ணனாக அழைக்கட்டும்” என கொந்தளித்திருந்தார்.

இதையடுத்து கௌதம் கம்பீருக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு தேசத்திலிருந்தும் பலவாறான விமர்சனங்கள் பொதுவெளியில் பகிரப்பட்டன. இந்தச் சூழலில், ஒரு பயங்கரவாத அமைப்பிடமிருந்து இமெயில் வாயிலாக மிரட்டல் வந்திருப்பதாக கம்பீர் புகார் தந்திருக்கிறார். மிரட்டல் விடுத்த அமைப்பின் முன்னொட்டில் ’ஐஎஸ்ஐஎஸ்’ என்று சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் பெயர் இருப்பதால், இந்தப் புகாரை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கோரி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE