இன்றைய தினத்தை கூட்டங்களின் நாள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியமான கூட்டங்கள் இன்று (நவ.24) நடைபெறுகின்றன. அதில் முதலாவதாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் குறிப்பிடலாம்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29 தொடங்கி அடுத்த மாதம் 23-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. இதை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில்தான், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியவை குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அத்துடன், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது.
தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதிப்பதுடன், ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அவைகுறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்திலும் இன்று முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் இன்று நடத்துகிறார். தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில், அதை எதிர்கொள்வது, நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவது போன்றவற்றுக்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்று, இன்னொரு முக்கிய கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வந்திருக்கும் மத்திய குழுவினர், அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு முடித்திருக்கும் நிலையில் அதுகுறித்து ஆலோசிப்பதற்காக, தமிழக முதல்வரை இன்று சந்திக்கின்றனர். இதில், தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்குமாறு, தமிழக அரசு சார்பில் மத்தியக்குழுவிடம் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிகிறது.
அரசு ரீதியிலான இந்தக் கூட்டங்களைத் தவிர்த்து, அரசியல் ரீதியான ஆலோசனைக் கூட்டமும் அதிமுக சார்பில் இன்று அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வது, சசிகலா விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.