ஏரியூர்.
சிவகங்கை மாவட்டத்தின் காங்கிரஸ் கோட்டைகளில் பிரதானமானது. ஜில்லா போர்டு மெம்பராக இருந்த இந்த ஊரைச் சேர்ந்த செல்லையா அம்பலம் என்ற நாச்சியப்பன் அம்பலம் அவர்களின் பேரன் இ.எம்.எஸ்.அபிமன்யு.
1977-ல், தனது 11-வது வயதில் காங்கிரஸ் கூட்டத்தில் முதல் முதலில் கலந்து கொண்ட சிறுவன் அபிமன்யு. அது பெரியவர் ஈ.வெ.கி. சம்பத் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டம். இவருடைய சித்தப்பா, பின்னாட்களில் மத்திய அமைச்சராக வந்த சுதர்சன நாச்சியப்பன், தன்னுடைய மோதிரத்தை அடகு வைத்து நடத்திய கூட்டம் அது.
1984-ல் தொடங்கி, அன்புத் தலைவர் சிதம்பரம் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் அவருக்காக தேர்தல் பணியாற்றியவர் அபிமன்யு. 1989-ல் ஐயா உ.சுப்பிரமணியத்துக்கும் அன்புத் தலைவர் சிதம்பரத்துக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு அறிக்கை போர் நடைபெற்றது. அப்போது, "கோழி மிதித்துக் குஞ்சு சாகாது" என்று பேட்டி கொடுத்த தலைவர் சிதம்பரம், அதே சூட்டுடன் உ.சுப்பிரமணியத்தைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அவர் தன்னுடன் அழைத்துச் சென்றது அபிமன்யுவை. அந்த அளவுக்கு அபிமன்யு தலைவருக்கு நெருக்கமானவராக இருந்தார்.
1990-களில் மூப்பனாருக்கும் வாழப்பாடியாருக்குமான அரசியல் யுத்தம் உச்சத்திலிருந்தபோது, திருப்பத்தூர் சிங்கம்புணரி பகுதிகளில் இருந்த சீனியர் காங்கிரஸார் அத்தனை பேரும் வாழப்பாடியாருடன் கைகோத்தார்கள். அப்போது அபிமன்யுவை அழைத்த தலைவர் சிதம்பரம், “நீங்கள் சிவகங்கையில் கட்சிப் பணியாற்ற வேண்டாம். இனிமேல் உங்களுடைய சொந்தத் தொகுதியான திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு, திருப்பத்தூர் அரசியலுக்கு வந்த அபிமன்யு ஏராளமான கல்லூரி மாணவர்களை காங்கிரஸ் கட்சியில் கொண்டுவந்து இணைத்தார். 1991-ல், டெல்லியில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டுக்கு இன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய செயலாளர் மாணிக்கம் தாகூர், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசிம்மன் ஆகியோரை டெல்லிக்கு அழைத்துச் சென்றவர் அபிமன்யு.
1992-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தபோது, கட்சி உறுப்பினர் அட்டை பெறுவதில் தலைவர் சிதம்பரத்துக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அன்புத் தலைவர் சிதம்பரம், ‘சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்’ என்று சிவகங்கை காங்கிரஸாருக்கென பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கினார். அதற்காக, பாராளுமன்ற தொகுதி முழுவதும் சென்று ஒவ்வொரு உறுப்பினரையும் போட்டோ எடுத்தவர் பொன்.ராதா. உறுப்பினரின் பெயரை எழுதி அந்த அடையாள அட்டையை தயாரித்தவர் அபிமன்யு.
தலைவர் சிதம்பரம் டெல்லி செல்வதற்காக நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்து ஏர்போர்ட் செல்லும் வழியில், அந்த உறுப்பினர் அட்டைகளை சீட்டுக்கட்டு போல் அடுக்கிக்கொடுத்து, காரிலேயே அவரிடம் அவற்றில் கையெழுத்து பெற்று உறுப்பினர்களிடம் கொண்டுவந்து சேர்த்தவர் அபிமன்யு.
1992-ல் அபிமன்யு சிங்கம்புணரியில் மாணவர் காங்கிரஸ் மாநாட்டை நடத்தினார். அதில் பேசிய தலைவர் சிதம்பரம், “ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் இங்கே கூடி இருக்கிறார்கள். அதற்கு காரணம் நான் அறிவேன். மாணவர்களின் இதயம் இங்கேதான் இருக்கிறது” என்று சொல்லி அபிமன்யுவை கைகாட்டினார்.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் அன்றைக்கு பவர்ஃபுல்லான அதிமுக அமைச்சராக இருந்தபோதே, திருப்பத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அபிமன்யு.
சைக்கிள் பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் எதுவாகயிருந்தாலும் அபிமன்யு நடத்துவது மிக வித்தியாசமாக இருக்கும். திராவிட கட்சிகளுக்கு போட்டியாக சுவர் விளம்பரம் ஆகட்டும், அரசியல் ஆகட்டும் அபிமன்யு பாணியே தனிதான்.
இப்படியெல்லாம் கட்சி வளர்த்த அபிமன்யு, இன்றுவரை எந்த அரசுப் பதவிக்கும் வரவில்லை. 1989-லிருந்து எம்எல்ஏ சீட்டுக்காக கட்சியில் மனு கொடுத்துக் கொண்டே இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் மாணவர் காங்கிரஸ் தலைவர், தமாகாவில் இருந்தபோது சிவகங்கை மாவட்டச் செயலாளர் இதுதான் கட்சிக்கு உழைத்தமைக்காக அபிமன்யு கண்ட பலன்கள்.
அன்புத் தலைவர் சிதம்பரம் அரசியலில் எத்தகைய முடிவெடுத்தாலும் அவரோடு சேர்ந்தே பயணித்தவர் அபிமன்யு. அப்படிப்பட்டவர் இப்போது கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். 40 ஆண்டுகாலம் அன்புத் தலைவர் சிதம்பரத்துடனேயே பயணிக்கும் அபிமன்யுவுக்கு, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆகவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு. அவருக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் அந்த இடத்தை எளிதாக அடைந்துவிட முடிகிறது. ஆனால், அபிமன்யுவுக்கு இன்றுவரை கைகூடவில்லை.
தன்னுடைய சொந்த சித்தப்பா சுதர்சன நாச்சியப்பன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தனது சொந்தபந்தங்கள் எல்லாம் இன்னொரு பக்கம் நிற்கிறார்கள். அபிமன்யு மட்டும் சங்கடங்களைச் சகித்துக் கொண்டு, தலைவர் சிதம்பரம் பின்னால் நிற்கிறார்.
அபிமன்யு உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சி நண்பர்கள் வந்தார்கள்; பார்த்தார்கள்; சென்றார்கள். பெரும் செலவில் அவருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு கட்சியில் கைகொடுக்க யாரும் இல்லை. கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு தனக்கு தேர்தல் பணி செய்ததை நன்றியுடன் நினைத்துப்பார்த்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனும் தான் அப்போது அபிமன்யுவுக்கு உதவினார்கள்.
1999 தேர்தலில், அபிமன்யுவின் சித்தப்பா சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். தலைவர் சிதம்பரம் தமாகா வேட்பாளர். அந்தத் தேர்தலில் யாருக்கு தேர்தல் வேலை செய்வது என்ற குழப்பம் வருகிறது. அப்போது அபிமன்யுவின் தகப்பனார் முத்து சுப்பிரமணியம் அம்பலம், “உன்னை நாங்கள் யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உன் மனதுக்கு எது சரியெனப் படுகிறதோ அதன்படி நடக்கலாம்” என்றார்.
குழப்பம் தீர்ந்து அந்தத் தேர்தலில் தலைவர் சிதம்பரத்துக்கு தீவிரமாக களப் பணியாற்றினார் அபிமன்யு. குடும்ப உறவுகளைவிட அரசியலில் தான் ஏற்றுக்கொண்ட தலைமை தான் முக்கியம் என நினைத்தார் அபிமன்யு. அபிமன்யுவின் தகப்பனார் மறைந்தபோது, அனைத்துக் கட்சி முக்கியஸ்தர்களும் அபிமன்யு வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். அன்புத் தலைவரும் வந்திருக்கலாமே என்ற ஆதங்கம் இன்றைக்கும் அபிமன்யுவுக்குள் இருக்கிறது. அதேபோல் தான் அவரது மனைவி லதா இறந்த சமயத்திலும், “சிதம்பரம் உள்ளூரில் தானே இருக்கிறார்... ஏன் வரவில்லை” என்று கேட்டவர்களுக்கு அபிமன்யுவால் பதில்சொல்ல முடியவில்லை.
ஆனாலும் இன்றைக்கும் தலைவர் சிதம்பரத்தின் மீது, அப்பழுக்கற்ற அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் அபிமன்யு.
சிவகங்கை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட காங்கிரஸ் குடும்பங்களைப் பற்றி இதுவரை எழுதி இருக்கிறேன். மாவட்ட அரசியலில் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் காங்கிரஸ் பேரியக்கத்துக்காக உழைத்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சமிட்டிருக்கிறேன். ஒரு உண்மையான காங்கிரஸ்காரனாக எனது எழுத்து காங்கிரஸுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சிறிதேனும் பயன்பட்டிருந்தால், அதுவே எனக்கு மகிழ்ச்சி.
அனைவருக்கும் நன்றி.
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:
சிவகங்கையும் சிதம்பரமும்... 28