‘சார்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் போலீஸாரின் கூற்று நம்பத் தகுந்ததாக இல்லை’ என்று கூறியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆடு திருட்டுக் கும்பலை துரத்திப் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள், நேற்று முன்தினம் இரவில் நவல்பட்டு காவல் நிலைய எல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர்மிகு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமென்று நாம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தோம். பூமிநாதன் கொலைக்குக் காரணமானவர்களை தேடிக் கண்டுபிடிக்க நான்கு சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒருவனுக்கு 19 வயது என்றும், மற்றவர்களுக்கு 10 வயது என்றும் காவல் துறை மூலமாகவே அறிவிப்பு வந்திருக்கிறது.
காவல் துறையின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, ஆச்சர்யமூட்டுகிறது. நல்ல திடகாத்திரமான ஒரு காவல் துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது சிறிதும் ஏற்புடையதாக இல்லை. அரிவாளைத் தொடுவதற்குக் கூட அஞ்சக் கூடிய வயதில், அதைத் தூக்கியது எப்படி? அதை வைத்து நல்ல உடல் வலுவுள்ள ஒரு மனிதரை உயிர் போகின்ற அளவிற்குக் காயப்படுத்த முடியுமா? என்று பல கேள்விகள் எழுகின்றன.
முதலில் வந்த தகவலின்படி, 2 இருசக்கர வாகனங்களில் வந்தார்கள், அதில் ஒரு வாகனத்தில் திருட்டு ஆடுகளை வைத்துக் கொண்டு 2 பேரும், இன்னொரு வாகனத்தில் அதற்குப் பாதுகாப்பாக 2 பேரும் வந்தனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது காவல் துறையினரால் தெரிவிக்கப்படக்கூடிய செய்திகள் எதுவும் நம்பக் கூடியதாக இல்லை. வழக்கமாக தென்மாவட்டங்களில் இதுபோன்ற ஒவ்வொரு பெரிய சம்பவத்திற்குப் பின்பும், கணக்கிற்காக இளஞ்சிறார்களைக் காண்பித்து அந்த வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதே வாடிக்கை.
அதைப்போன்று, திட்டமிட்டு பூமிநாதன் படுகொலையிலும் உண்மைக் குற்றவாளிகளை மறைத்து, வழக்கில் கணக்குக் காட்டுவதற்காக சிறார்களை குற்றவாளிகளாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது.
எனவே, காவல் துறையின் இந்த விசாரணையின் மூலம் முழு உண்மையும் வெளிவரும் என்ற நம்பிக்கை துளியளவும் இல்லை.
குற்றவாளிகள் இளஞ்சிறார்கள் என்று காவல் துறையினராலேயே சொல்லப்பட்ட பின்பு, அவர்கள் கடும் தண்டனை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவே, இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை உடனடியாக, சிபிஐ வசம் ஒப்படைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.