‘ஜெய் பீம்’ விவகாரத்தில் திரும்பிப் பார்க்காத திமுக!

By டி. கார்த்திக்

தமிழக சினிமா, அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக 'ஜெய் பீம்' படம்தான் ஹாட் டாபிக். நடிகர் சூர்யாவை பாமக, பாஜக ஆதரவாளர்கள் இணைந்து மிரட்டிக்கொண்டிருக்க, படத்தை முதன்முதலாகப் பார்த்து வாழ்த்துச் செய்தி வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுகவினரும் எதுவுமே நடக்காதது போல் அமைதிகாப்பது ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது.

‘ஜெய் பீம்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு முதல்நாளே படத்தைப் பார்த்துவிட்டு, படம் பற்றி முதல் விமர்சனத்தை எழுதியது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது காவல் துறையினரால் தான் அனுபவித்த துன்பம் குறித்தும், தனக்காக உயிர்விட்ட சிட்டி பாபுவைப் பற்றியும் பாராட்டுக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிடத் தவறவில்லை. படம் வெளியாவதற்கு முன்பே வெளியான முதல்வரின் பாராட்டுக் கடிதம், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

பாமக – பாஜக: இணைந்த கைகள்

ஆனால், படம் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே படத்தைச் சர்ச்சைகள் சுற்றத் தொடங்கிவிட்டன. கடலூரில், 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்துதான் சர்ச்சைகள் பின்னப்பட்டன. படத்தில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றத்தை நிகழ்த்தும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருப்பது போல காட்டப்படும் அக்னி கலச நாட்காட்டியும் சர்ச்சைக்கு வித்திட்டன. உண்மைச் சம்பவத்தில் அந்தோணிசாமி என்ற துணை ஆய்வாளர்தான் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டார். ஆனால், படத்தில் குருமூர்த்தி என்று பெயர் மாற்றப்பட்டது, அவர் வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஒருவரை நினைவுபடுத்துவதாகப் பாட்டாளிகள் கொந்தளித்தார்கள்.

அது தவறு என்பதை உணர்ந்த படக்குழு, உடனே அக்னி கலச காட்சியை நீக்கி, மகாலட்சுமி படம் இருக்கும்படி மாற்றியது. அதுவும் சர்ச்சையானது. படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியபோதும், இப்படத்தில் கிறிஸ்தவரான அந்தோணிசாமி பெயரை குருமூர்த்தி என்று எப்படி வைக்கலாம் என்றும் அக்னி கலச நாட்காட்டிக்குப் பதில் மகாலட்சுமி படம் எப்படி வைக்கலாம் என்றும் பாஜகவில் உள்ள பிற தலைவர்கள் உள்ளிட்ட வலதுசாரி ஆதரவாளர்களும் பாமகவினருடன் கைகோத்தனர். நீட் தேர்வு, வேளாண் சட்டம், சுற்றுச்சூழல் திருத்த மசோதா போன்றவற்றை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பதால், சூர்யா எப்போதுமே பாஜகவினருக்கு இலக்குதான்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி 9 கேள்விகள் கேட்டு எழுதிய கடிதத்துக்கு, நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதிய பிறகுதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது. அன்புமணிக்குத் திமிர்த்தனமாக சூர்யா கடிதம் எழுதியதாகக் கொந்தளிக்கிறார்கள் பாட்டாளிகள். இன்னொரு பக்கம், சூர்யாவின் கடிதத்தை விசிக, இடதுசாரி ஆதரவாளர்கள் ஆராதித்தனர். அதன்பிறகே, வன்னியர் சங்கத்தைப் பாமக களமிறக்கிவிட்டது.

‘சூர்யாவை எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசு’ என்று மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிசாமி அறிவித்தது, ‘சூர்யா வெளியே நடமாட முடியாது’ எனும் எச்சரிக்கை, சூர்யா படம் ஓடிய தியேட்டர் முற்றுகை, வன்னியர் சங்கம் சார்பில் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் என எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றப்பட்டது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று, நிஜ ‘ஜெய் பீம்’ நாயகி பார்வதிக்கு தான் வழங்க முன்வந்த ரூ.15 லட்சத்தை அவருடைய சொந்த ஊரில் வைத்து வழங்க சூர்யா முடிவு செய்திருந்தார். ஆனால், கடலூர், விழுப்புரம் பக்கம் போக வேண்டாம் என்று காவல் துறை அவரை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருந்தது.

’ஆதவன்’ ஆடியோ வெளியீடு: உதயநிதியுடன் சூர்யா

திமுகவினர் அமைதி

சூர்யாவைப் பிரச்சினைகள் நெருக்கிக்கொண்டிருக்க, திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரி கட்சிகள் அவருக்குப் பக்கபலமாக இருந்தன. ஆனால், இப்படத்தை முதலில் பார்த்துவிட்டு மனதார வாழ்த்திய திமுக முகாமில் மயான அமைதி. சூர்யாவுக்கு மிரட்டல்கள் அதிகரித்த பிறகும் திமுக மத்தியில் சலசலப்பு இல்லை. இத்தனைக்கும் திமுக ஆளுங்கட்சி. காவல் துறையை ஸ்டாலின்தான் கையில் வைத்திருக்கிறார். சினிமாக்காரர்கள் பலர் சூர்யா பக்கம் நிற்பதாக ட்விட்டரில் பதிவிட்டபோதும்கூட, திரைத் துறையைச் சேர்ந்த உதயநிதியிடமும் அசைவு இல்லை. வழக்கமாக, பாமக எழுப்பும் சர்ச்சைகளுக்கு வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறும் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் காணாமல்போனார்.

அதிகபட்சமாக, கட்சிப் பத்திரிகையான 'முரசொலி'யில் 'ஜெய் பீம் (சிங்) இது என்ன புதுக் குழப்பம்?' என்ற கலாய்ப்பு கட்டுரையோடு நிறுத்திக்கொண்டார்கள்.

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஆளுங்கட்சி பிஸியாக இருந்ததால், இதைக் கவனத்தில் கொள்ளாமல் போயிருக்கலாம் என்றும் சொல்வதற்கில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சிறு சலசலப்பு, சர்ச்சைகளுக்குக்கூட ட்விட்டர் பதிவு மூலம் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். சூர்யாவைப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான விசிகவினர் குரல் கொடுத்தபோதும் அமைதியே நிலவியது. நீண்ட அமைதிக்குப் பிறகுதான் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உதைத்தால் ஒரு லட்சம் பரிசு என்று அறிவித்த பாமக மா.செ மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அதுவும் திராவிடர் விடுதலைக் கழகம் புகார் அளித்த பிறகுதான். அதே கையோடு, நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ.1,001 ரொக்கப் பரிசு அறிவித்ததற்காக அர்ஜூன் சம்பத் மீதும் கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, இந்த விஷயத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தையும் ஆளும் தரப்பு ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு...

இந்தக் கட்டுரை எழுதும் வேளையிலும் ‘ஜெய் பீம்’ படத்துக்கு விருதுகள் தரக்கூடாது என்று மத்திய - மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம், சேலத்தில் இனி சூர்யா குடும்பத்தினர் படத்தை வெளியிடக் கூடாது என்று பாமக எம்எல்ஏ அருளின் ‘அன்பு’ கடிதம் என இந்த விவகாரம் நீர்த்துப்போகாமல் தொடர்கிறது. இதிலெல்லாம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக அரசு, அமைதியானது ஏன்?

ரவீந்திரன் துரைசாமி

ஆதாய அரசியல்

இதுபற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “இதற்கு, ‘ஆதாயம் அடைதல், ஆதாயம் இல்லை’ (losers and gainers) என்ற தியரிதான் காரணம். இந்த விவகாரம் உருவான பிறகு திமுக மட்டுமல்ல, அதிமுகவும் கருத்துச் சொல்ல முன்வரவில்லை. நாம் தமிழர் கட்சியும் படத்தைப் பார்த்து பாராட்டிவிட்டு, இப்போது அக்னி கலசம் வன்னியர்களுக்குரியது என்பது தெரியாதா என்று கேட்டிருக்கிறது. தமிழக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் வன்னியர்கள் இருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக வன்னியர்கள் பக்கம் நிற்பது தங்களுக்கு ஆதாயத்தைத் தரும் என்று சீமான் உள்ளிட்டோர் நினைக்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை கருத்தியல் ரீதியாகப் படத்தைக் கொண்டாடினாலும், வன்னியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அதைப் புறக்கணிக்க முடியாது என்பதால் அமைதி காக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளதையும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்” என்றார் அவர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என இந்த 3 தேர்தல்களிலும் திமுகவைக் கைவிடாமல் காப்பாற்றியது வட மாவட்டங்கள்தான். அண்மையில் 7 வட மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றியைத் திமுகவுக்கு அள்ளித் தந்தது, வன்னியர்கள் நிறைந்த மாவட்டங்கள். அதிமுக அரசு 10.5 சதவீத தனி இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தபோது, ‘தேர்தலுக்காகச் செய்கிறார்கள்’ என விமர்சித்த திமுகதான், ஆட்சிக்கு வந்ததும் அரசாணை வெளியிட்டு அந்த இடஒதுக்கீட்டைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலையும் இப்போது வெடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ சர்ச்சையையும் அதில் திமுகவின் அமைதியையும் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், பாமகவையும் வன்னியர்களையும் பிரித்துப் பார்த்துச் செயல்படும் கட்சி திமுக. இந்த விவகாரத்தில் பாமகவின் ஓர் அங்கமாக இருக்கும் வன்னியர் சங்கம் மட்டும் களமிறங்கவில்லை. பாமகவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இதர வன்னியர் அமைப்புகளும்கூட ‘ஜெய் பீம்’ படத்தில் காட்டப்பட்ட ‘அக்னி கலச’ விவகாரத்தில் கடுங்கோபத்தில் உள்ளன.

ஒருவேளை, வெளிப்படையாகக் குரல் கொடுத்தால், வன்னியர்களை அவமதித்த ‘ஜெய் பீம்’ படத்துக்கு திமுக ஆதரவு என்று பாமகவும், இந்துக்களை அவமதித்த காட்சிகளுக்கு திமுக ஆதரவு என்று வலதுசாரிகளும் கிளம்பக்கூடும் என்றும் திமுகவிலேயே பேச்சுகள் உள்ளன. உதாரணத்துக்கு, பூர்வகுடிகளின் பிரச்சினையைப் பேசிய ‘அசுரன்’ படத்தைச் சொல்லலாம். படத்தைப் பார்த்துவிட்டு ஸ்டாலின் போட்ட ஒற்றை ட்வீட்டுக்கும், அதற்கு ராமதாஸ் போட்ட பதில் ட்வீட்டும் அரசியல் ரீதியில் திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. பஞ்சமி நிலம் தொடர்பாக பிரச்சினையை ராமதாஸ் இழுத்துவிட, அந்தக் கோதாவில் பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள் குதித்து, பாமகவுடன் கைகோத்துக்கொண்டு, திமுகவுக்கு நெருக்கடியை கொடுத்தன. இப்போது ‘ஜெய் பீம்’ விவகாரத்திலும் சமூக ஊடகங்களில் பாமகவோடு வலதுசாரிகளும் கைகோத்தே செயல்படுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் திராவிட, இடதுசாரிச் சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் சித்தாந்தம் கொண்டவர்கள் சூர்யா பக்கம் நின்றபோதும், திமுக அதை வெளிப்படையாகச் செய்ய முடியாமல் போனதற்கு அரசியலே காரணம் என்று சொல்லலாம். இந்த அரசியல் அமைதி, திமுகவுக்குத் தேர்தல் ஆதாயத்தைத் தேடித்தருமா என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE