தடய மரபணு தேடல் மென்பொருள் உருவாக்கம்

By எஸ்.சுமன்

தடய அறிவியல் துறையில், இந்தியாவிலேயே முன்மாதிரியான முதல் நகர்வை தமிழகம் மேற்கொண்டுள்ளது. தமிழகம் உருவாக்கிய தடய மரபணு தேடலுக்கான பிரத்யேக மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

தடய அறிவியல் துறை என்பது காவல் மற்றும் நீதித் துறைகளின் செயல்பாடுகளில் முக்கிய இடம் வகிப்பது. நாளுக்குநாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப பெருகிவரும் குற்றங்களும், அவற்றை ஒட்டிய சட்டச் சிக்கல்களும் இந்த இரு துறைகளுக்கும் பெரும் சவாலாக இருப்பவை. இந்த சவால்களை அறிவியல்பூர்வமாக தீர்ப்பதற்காக தடய அறிவியல் துறை, நவீன அறிவியலை பின்பற்றி புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. இத்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றான மரபணு பிரிவில், கணினி நுட்பத்தை கலந்ததில் உருவானதே தடய மரபணு தேடல் மென்பொருள்.

தடய மரபணு தேடல் மென்பொருளை வெளியிடும் முதல்வர்

மனிதனின் கைரேகை, கண் ரேகை போலவே அவனது மரபணுவின் அடையாளங்களும் தனித்துவமானவை. கை, கண் ரேகைகள் கூட சேதத்துக்கும், அழிவுக்கும் உட்பட்டது. ஆனால் மரபணு அப்படியல்ல. மிஞ்சும் சிறு துண்டு எலும்பை வைத்து அதன் மூலமான மனிதனின் அடையாளத்தை அறிவியல்பூர்வமாக கண்டடையலாம். கிடைத்த தடயத்தையும், சேகரிப்பில் இருக்கும் தரவுகளையும் ஒப்பிட்டு உரிய முடிவுகளை எட்ட புதிய மென்பொருள் மிகவும் உதவும். அப்படி தமிழ்நாடு தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள, தடய மரபணு தேடல் மென்பொருளைத்தான் இன்று(நவ.20) தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தடய மரபணு தேடலை சுலபமாக்கும் மென்பொருள் மூலம் காணாமல் போனவர்களை கண்டறிவது, அடையாளம் தெரியாத சடலங்களை உறவினர்களிடம் சேர்ப்பது, கொலை கொள்ளை மற்றும் பாலியல் வழக்குகளில் திடமான சாட்சியங்களை சமர்ப்பிப்பது, தொடர் குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் கண்டு மடக்குவது ஆகியவை இனி சுலபமாகும்.

தடய அறிவியல், அதன் பிரிவான தடய மரபணு தேடல் ஆகியவற்றை அனைத்து அரசுகளும் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தடய மரபணு தேடலுக்கான பிரத்யேக மென்பொருளை உருவாக்கியதில் தமிழகம் புதிய தடம் பதித்திருக்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்துக்கு சில வளர்ந்த நாடுகளில் எதிர்ப்பும் உண்டு. குற்றப்பரம்பரைக்கு இணையான முத்திரை குத்தவும், சமூகத்தில் வேறுபாடுகளை உண்டாக்கவும் இவை பயன்படுத்தப்படுவதாக அதன் எதிர்ப்பாளர்கள் குறை சொல்வதும் உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE