சந்திரபாபுவின் சபதம்

By காமதேனு

ஆந்திர சட்டசபையில் நிகழ்ந்த விரும்பத்தகாத பேச்சால், பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சந்திரபாபு நாயுடு உடைந்து அழுதார். ’மீண்டும் ஆட்சியமைத்த பிறகே இந்த சட்டசபையில் நுழைவேன்’ என்று சபதமும் செய்தார்.

நடைபெற்றுவரும் ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடரில் வழக்கம்போல இன்றும்(நவ.19) அனல் பறந்தது. தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே காராசார விவாதங்களின் மத்தியில் ரசக்குறைவான பேச்சுகளும் பகிரப்பட்டன.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென உடைந்து அழுதார். “இரண்டரை வருடங்களாக சபையில் என்னை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டேன். இன்று என் குடும்பத்தை எல்லாம் இழுக்கிறார்கள்” என்றபோது பேச்சு வராது உடைந்து போனார்.

தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வரை, சட்டசபைக்குள் நுழையப் போவது இல்லை என்று சபதம் செய்தார்.

சந்திரபாபுவின் பேட்டி வெளியான சூட்டில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ரோஜா பதிலடி வீடியோ வெளியிட்டார். அதில் பேசிய ரோஜா, “விதி யாரையும் விட்டு வைக்காது சந்திரபாபு. 72 வயதில் நீங்கள் என் டிஆரை கலங்க வைத்தீர்கள். அதே வயதில் இன்று கலங்கி நிற்கிறீர்கள்” என்று ஆரம்பித்தவர், சந்திரபாபு ஆட்சி காலத்தில் சட்டசபையில் தனக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைகளை பட்டியலிட்டார். முடிவாக, சந்திரபாபுவின் கூற்றுப்படியே அவர் இனி சட்டசபைக்கு வரவப்போவதில்லை என்றும் ரோஜா பொரிந்து தள்ளினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE