பேருந்து சேவைக்காக காத்திருக்கும் தாழக்குடி மக்கள்!

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பெருமழையால், இந்த கிராமத்துக்குச் செல்லும் சாலை பல இடங்களில் சேதமானது. இதைச் சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால், தாழக்குடி வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை இன்னும் இயக்கப்படவில்லை. இதனால், இந்தச் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருகின்றனர்.

இதுகுறித்து தோவாளை ஒன்றிய பாஜக செயலாளர் சொக்கலிங்கம் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்தவாரம் பெருமழை பெய்தது. அணைகளும், பிற நீராதாரங்களும் நிரம்பி ஊர்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இந்தப் பெருமழை நேரத்தில் இறச்சகுளம் பகுதியில் இருந்து தாழக்குடி வரும் சாலையும் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது. இந்தச் சாலையில் ஆங்காங்கே சீர் செய்யும் பணிகள் நடப்பதால், பேருந்து சேவையை முற்றாக நிறுத்தியுள்ளனர். தாழக்குடி பேரூராட்சிப் பகுதியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுவந்த 6 அரசுப் பேருந்துகளும் சாலைப்பழுதினால் இப்போது நிறுத்திவைத்துவிட்டனர். இதே வழித்தடத்தில் இயங்கிவந்த மினிபேருந்தும் கரோனா நேரத்தில் நின்றுபோனது.

சொக்கலிங்கம்

தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கூட்டுறவு வங்கியும் உள்ளது. இந்த வங்கிதான் அருகாமை கிராமங்களான ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் மக்களுக்கும் கூட்டுறவு வங்கியாகும். இதுபோக தாழக்குடியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தபால் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி என முக்கிய அரசு அலுவலகங்கள் பலவும் உள்ளது. இதற்கெல்லாம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். ஆனால் பெருமழையினால் சேதமடைந்த சாலைகள் ஆமைவேகத்தில் சீர் செய்யப்பட்டுவருவதால் இன்னும் இந்த சாலையில் அரசுப் பேருந்துகளுக்கான போக்குவரத்துச் சேவை தொடங்கப்படவில்லை. தாழக்குடி கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நாகர்கோவிலுக்கு கல்வி,வேலை நிமித்தமாக தினசரி செல்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் டூவீலர் வசதி கிடையாது. இதனால் நான்கைந்து பேர் சேர்ந்து ஆட்டோ பிடித்து தங்களுக்குள் பணத்தைப் பகிர்ந்துகொண்டு வேலைக்குச் செல்லும் சம்பவங்களும் நடந்துவருகிறது.

சின்ன, சின்னக் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அரசின் இலவசப் பேருந்திலேயே பயணம் செய்துவந்தனர். இப்போது அவர்களுக்கும் கடும் நிதி நெருக்கடியை அரசுப் பேருந்துகள் இயங்காதது ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் இந்தச் சாலையை விரைந்து சீரமைத்து, அரசுப் போக்குவரத்து சேவையைத் தொடங்கினால் தாழக்குடி, வீரநாராயண மங்கலம், இறச்சகுளம் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE