சாதித்த சீக்கியர்கள்: பணிந்த பாஜக

By எஸ்.சுமன்

தலைநகர் டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டிருக்கும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து நவ.26 அன்று அறிவிப்பதாக இருந்தனர். அதற்குள் பிரதமர் மோடி, விவசாயிகள் போராட்டத்தின் மையமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். வெயில், மழை, குளிர், போலீஸாரின் அடக்குமுறை என அனைத்தையும் சகித்துக்கொண்டு, நூற்றுக்கணக்கிலான சகாக்களை பலிகொடுத்து ஒருவழியாய் தங்கள் போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

பெயரளவில் இந்திய விவசாயிகளின் போராட்டம் என்ற போதும், அதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள். பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேச மாநிலங்களில் இருந்து குழுமியவர்கள். தலைநகரை எளிதில் எட்ட முடிந்தவர்கள் என்பது மட்டுமன்றி, மனதிடத்தோடு சளைக்காது நின்று போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வைத்ததைவிட, அசுர பலத்தோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த பாஜகவை பணிய வைத்ததிலும் சீக்கியர்களின் போராட்டம் வீரம் செறிந்ததாகிறது.

முன்னதாக, இடைத்தேர்தல் தோல்விகள் குறித்து ஆய்வு செய்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம், வாக்களர் அதிருப்திக்கு காரணமாக வேளாண் சட்டம் உட்பட பல்வேறு காரணங்களை அடுக்கியது. அவற்றை பரிசீலித்த பாஜக தலைமை அப்போதே வேளாண் சட்டம் வாபஸ் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்ததுடன் அவற்றுக்கான நாளையும் குறித்தது. பஞ்சாப்பில் காங்கிரஸை உடைத்துக்கொண்டு தனிக்கட்சியாக களம் கண்ட அமரிந்தர் சிங், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்தார். அவை குறித்து அமித்ஷாவுடனான சந்திப்பிலும் வலியுறுத்தினார்.

அமித் ஷா - அமரிந்தர் சிங்

இப்படித்தான், இடைத்தேர்தல் முடிவுகளும் பஞ்சாப்பிலிருந்து கிடைத்த சமிக்ஞைகளும் வேளாண் சட்ட வாபஸை இறுதி செய்தன. வேளாண் போராட்டங்களை முன்னெடுக்கும் சீக்கியர்களை குளிர்விக்கும் வகையில், குருநானக் ஜெயந்தியன்று வாபஸ் அறிவிப்பை வெளியிடவும் முடிவானது.

இனி அமரிந்தர் கூட்டணியில் புது வேகத்தில் பஞ்சாப்பில் பாஜக களமிறங்கும். தேர்தல் நெருக்கத்தில் மேலும் பல அதிரடிகளையும் அறிவித்து, பஞ்சாப் வெற்றியை அறுவடை செய்ய முனையும். உபியை பொறுத்தவரை பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியை கருத்துக்கணிப்புகள் உறுதி செய்திருப்பதால், பாஜக இறுமாந்திருக்கிறது. ஆனபோதும், லக்கிம்பூர் விவசாயிகள் கலவரத்தில் சீக்கிய விவசாயிகள் படுகொலையானதன் பாதிப்பை சற்றே தணிக்கவும் தற்போதைய வேளாண் சட்ட வாபஸ் உதவலாம். இது தேர்தலில் அதிருப்தி வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் வாய்ப்பளிக்கும் என்பது பாஜக கணிப்பாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE