இரந்து வாழ்ந்தவர் இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேரா..?

By காமதேனு

ஒருவரின் இறுதிப் பயணத்தில் எத்தனை பேர் கலந்துகொள்கிறார்கள் என்பதை வைத்தும், அதுவரையிலான அவரது வாழ்க்கையை கணிக்கலாம் என்பார்கள். கர்நாடகாவில் அப்படியொரு ஒரு நபரின் இறுதி ஊர்வலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும் செத்துப் போனவர், அதுநாள்வரை அவர்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்தவர்.

பெல்லாரி அருகே ஹடகாலியில் வசித்து வந்தவர் பாஸ்யா. வீடு என்று எதுவும் இவருக்கு கிடையாது. மனநலம் குன்றியவராக பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டவர். பொதுமக்களிடம் இரந்து வாழ்ந்து அதில் வயிற்றைக் கழுவி வந்தவர். அவரை பிச்சைக்காரராகக் கருதி, அப்பகுதி மக்கள் அவரை அணுகுவதில்லை. சில்லறை நாணயத்தை தந்தால் மனதார வாழ்த்துவார் பாஸ்யா. அப்படித் தரும் சில்லறையிலும் ஒரு ரூபாய்க்கு மேலிருந்தால் புன்னகையோடு திருப்பிக் கொடுத்து விடுவார்.

அவரை தரிசிப்பதிலும், அவரிடம் வாழ்த்து வாங்குவதிலும் பகுதி மக்களுக்கு ஏதோ பிடிமானம் கிடைத்துவிட்டது. வாய்வழி விளம்பரமாக அதுவும் பரவிவிட்டது. எனவே, அன்றைய தினத்தில் பாஸ்யா தங்கள் எதிரில் வருவதையும், சில்லைறை அளித்து வாழ்த்துப் பெறுவதையும் நற்பேறாகக் கருதியவர்கள் அதிகம். பாஸ்யா ஏதோ ஆருடம் சொன்னதாகவும் அது தங்கள் வாழ்வில் பலித்ததாகவும் வதந்திகள் உண்டு. ஆனால், அவர் மனநலம் குன்றியவர்; மக்களிடம் இரந்து வாழ்பவர் என்பது மட்டும் எல்லோரும் அறிந்த ஒன்று.

பாஸ்யாவின் வாஞ்சை மாறாத முகம், பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. சில்லறைகள் தருவது மட்டுமல்லாது தங்கள் தொழில் சார்ந்து ஏதேனும் சிறு பொருளை பரிசாகவும் தந்து மகிழ்வார்கள். இதற்கிடையே, அண்மையில் பாஸ்யா விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். பாஸ்யா இறந்த தகவல் பரவியதும், அவரை அறிந்த உள்ளங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் படையெடுத்தார்போல வந்துசேர்ந்தார்கள்.

இரந்து வாழ்ந்த, மனநலன் குன்றிய பாஸ்யாவை தங்கள் குடும்ப உறுப்பினரைப் போல, இறுதிச் சடங்கில் அலங்கரித்து வழியனுப்பி வைத்தார்கள். சமூக ஊடகங்களில் அந்த இறுதி ஊர்வலம் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS