மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி நாவலாசிரியராகவும் மாறி உள்ளார். அவரது எழுத்தில் வெளியாகவிருக்கும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் சீண்டக் காத்திருக்கிறது.
அமேதி தொகுதி மக்களவை உறுப்பினரும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி நாவலாசியர் அவதாரம் எடுத்து, ’லால் சலாம்’ என்ற நாவலை எழுதி முடித்துள்ளார்.
2010-ம் ஆண்டு ஏப்ரலில் சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகளின் கொடூர தாக்குதலில் 75 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த உண்மை நிகழ்வின் முன்னும் பின்னுமான சம்பவங்களை கோர்த்து, ஸ்மிருதி இரானியின் புதிய நாவல் உருவாகி இருக்கிறது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும், சிஆர்பிஎப் வீரர்கள் வலிய பொறியில் சிக்க வைக்கப்பட்டதாகவும் அப்போதே எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. சிஆர்பிஎப் வீரர்கள், மாநில போலீஸார், காட்டு வழிகாட்டிகள் அடங்கிய சுமார் 100 பேர் கொண்ட குழுவை, ஆயிரத்துக்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சூழ்ந்து தாக்கினார்கள். கண்ணி வெடிகள் வைத்து வாகனங்களை தகர்த்ததில் தொடங்கி, குன்றின் மீதிருந்து வீரர்களை வளைத்து சுட்டுக் கொன்றது வரை மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வெளிப்பட்ட, தெளிவான திட்டமிடல்கள் பல விடை தெரியாத கேள்விகளை அப்போது எழுப்பின.
மன்மோகன் சிங்கை பிரதமராக கொண்ட காங்கிரஸ் ஆட்சியின் கரும்புள்ளியாகவும் அந்த சம்பவம் அமைந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், துயர சம்பவத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் மன்மோகன் அதை நிராகரித்தார். சத்தீஸ்கர் போலீஸ் உயரதிகாரிகள் சில உண்மைகளை கண்டறிந்ததாக அப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டது.
இந்தப் பின்னணியில் தொடங்கி ஸ்மிருதியின் நாவல் வேறு பல தளங்களில் விரைகிறது. விக்ரம் பிரதாப் சிங் என்ற போலீஸ் அதிகாரி தாந்தேவாடா துயரத்தின் மர்மங்களை விசாரிக்க கிளம்புவதாகவும், அப்படிப் பல்வேறு ஊழல் மற்றும் திரைமறைவு அரசியல் களேபரங்களை அவர் வெளிப்படுத்துவதாகவும் கதை செல்கிறது.
வெகுநாளாக தனது மனதில் ஓடிக்கொண்டிருந்த கதையை ஒரு வழியாக இறக்கி வைத்திருப்பதாக ஆறுதல் கொள்கிறார் ஸ்மிருதி இரானி. தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையாக வளர்ந்த ஸ்மிருதி, பாஜகவில் சேர்ந்து அரசியலில் பிரபலமானார்.
ஸ்மிருதியின் லால் சலாம் நாவல் நவ.29 அன்று வெளியாகிறது. வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் நாவலை வெளியிடுகிறது.