விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில இணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன், டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை வன்முறையாளர்களாகக் காட்சிப்படுத்துவதாகக் கூறி, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், படத்தில் உங்களின் வன்மத்தைக் காட்டினால் ரசிகர்கள் திரையரங்குகளில் காட்டுவார்கள் எனக் கூறியிருந்தார். அதன் பின்னர், பாமகவைச் சேர்ந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் மற்றும் மயிலாடுதுறை பழனிசாமி ஆகியோர், நடிகர் சூர்யாவை மிரட்டும் தொனியில் வீடியோ வெளியிட்டனர்.
குறிப்பாக, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு ரத்து மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக, அன்புமணி ராமதாஸ் சாதி மோதலைத் தூண்டிவிடும் செயலை செய்துவருவதாக விக்ரமன் குற்றம்சாட்டினார்.
மேலும், ருத்ர தாண்டவம் படத்தில் வன்னியர்களை இழிவாகக் காட்சிப்படுத்தியதைத் தடுக்காமல், ஜெய் பீம் படத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கச் செயல் எனக் கூறிய விக்ரமன், அன்புமணி ராமதாஸ், மனோஜ், பழனிசாமி ஆகியோர் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளித்திருப்பதாகக் கூறினார்.