பட்டத்து இளவரசர் உதயநிதி: சதாய்க்கும் ஜெயக்குமார்

By காமதேனு

மழை நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக உதயநிதி ஸ்டாலின் சென்ற இடத்தில் அரங்கேறிய சம்பவங்கள் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் சமூக ஊடகப் பதிவுக்கு அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில், மழை நிவாரணப் பொருட்களை வழங்கச்சென்ற உதயநிதி ஸ்டாலினின் தாமத வருகையால், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் மயங்கி விழுந்ததாகவும், நிவாரணப் பொருட்களை முழுமையாக வழங்காது திமுகவினரே எடுத்துச் சென்றதாகவும், தனது ட்விட்டர் பதிவில் பகடியாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெயக்குமார்.

உதயநிதியை 'பட்டத்து இளவரசர்' என்று அதில் விளித்திருக்கும் ஜெயக்குமார், அங்கு நடந்த சம்பவங்களாக தனது பதிவை ஒட்டிய வீடியோ ஒன்றையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார். அவற்றை அதிமுகவினர் வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் மீள்பதிவேற்றி வருகின்றனர்.

ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோது, அவர் சர்ச்சையில் சிக்கும்போதெல்லாம உதயநிதி ஸ்டாலின் வைக்கும் ட்விட்டர் பதிவுகளில் நக்கலும், மறைபொருளும் நிறைந்திருக்கும். குறிப்பாக கரோனா தடையை மீறி உதயநிதி பயணம் மேற்கொண்டதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டியதற்கு, ட்விட்டரில் உதயநிதி தந்த பதிலடி வெகுபிரசித்தம். அவற்றுக்கு அப்போது பெரிதாக வினையாற்றாத ஜெயக்குமார், தற்போது தன் பாணியில் ட்விட்டர் பதிவுகளில் இறங்கி சதாய்க்கிறார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, வழக்கு மற்றும் ரெய்டு அச்சத்தால் இருக்கும் இடம் தெரியாது அமைதிகாக்கும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில், ஜெயக்குமார் போன்றவர்கள் எதிர்கட்சிக்கே உரிய லாவணி அரசியலுக்கு திரும்பி இருப்பது, அதிமுகவினருக்கு ஆறுதல் தந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE