மதுரா மசூதியில் கிருஷ்ணர் சிலை நிறுவுவோம்!

By எஸ்.சுமன்

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிரபல சாஹி இட்கா மசூதியில், கிருஷ்ணரின் சிலையை நிறுவப்போவதாக அகில பாரத இந்து மகாசபை மீண்டும் அறிவித்திருக்கிறது. மேலும் அதற்கான நாளையும் குறித்துள்ளது.

இந்து மகாசபையின் தலைவரான ராஜ்யஸ்ரீ சௌத்ரி, மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் சாஹி இட்கா மசூதி அமைந்திருப்பதாகவும், அதற்குச் சான்றாக அருகில் பிரபல கேசவ தேவ் கோயில் அமைந்திருப்பதையும் வலியுறுத்தி வருகிறார்.17-ம் நூற்றாண்டுப் பின்னணியிலான இந்த மசூதிக்கு எதிராக, மதுரா நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், அவ்வப்போது கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரத்தை கையிலெடுக்கும் ராஜ்யஸ்ரீ, இம்முறை மசூதியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்படும் என்று தீர்மானமாக அறிவித்திருக்கிறார்.

ராஜ்யஸ்ரீ சௌத்ரி

இதற்காக புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டுவந்து, அந்த இடத்தில் ’மகா ஜல அபிஷேகம்’ நடத்தி தூய்மை செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கான நாளாக, டிசம்பர் 6-ம் தேதியை அவர் அறிவித்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த தினத்தை தேர்ந்தெடுத்ததற்கு சிறப்புக் காரணம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ராம ஜென்ம பூமி வரிசையில், கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரத்தை இந்து மகாசபை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதிலும், டிசம்பர் 6 நெருக்கத்தில் இந்தக் குரல் மேலும் வலுவடையும். மேலும் உத்தர பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் நெருங்கி வருவதாலும், பிரதான ஓட்டு வங்கியான இந்துக்களை குறிவைத்து, இம்முறை தீவிரமாக இந்து மகாசபை களமிறங்கி உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேத்தியான ராஜ்யஸ்ரீ, மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே படத்துக்கு மாலையிட்டு ஆரத்தி காட்டியதிலும் இதற்கு முன்பாக ஊடக கவனம் பெற்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE