‘நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு‘ என ட்விட்டரில் அறிவித்திருந்த அர்ஜூன் சம்பத் மீது, கோவை மாநகர காவல் துறை, இன்று(நவ.17) வழக்குப் பதிவுசெய்தது.
ஜெய் பீம் படத்தை முன்வைத்து பாமக - சூர்யா இடையே சச்சரவு எழுந்தது. இதில், சூர்யாவை தாக்குபவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரான சித்தமல்லி பழனிசாமி என்பவர் பகிரங்கமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு எதிரான மிரட்டல்கள் மேலும் அதிகரித்தன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாய், சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளின்கீழ் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
சூர்யாவுக்கு எதிரான சித்தமல்லி பழனிசாமியின் மிரட்டல் அறிவிப்புக்கு முன்னோடியாக, அதேபோன்ற மிரட்டலை இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக ஏற்கனவே விடுத்திருந்தார்.
பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு நபர் விஜய் சேதுபதியை எட்டி உதைத்ததாக பரபரப்பு எழுந்தது. அது தொடர்பாக ஒரு தரப்பினர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டனர். அதன் அடிப்படையில், ‘விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு, ஒவ்வொரு உதைக்கும் ரூ.1,000 பரிசு வழங்கப்படும்’ என அர்ஜூன் சம்பத் நவ.7 அன்று தனது ட்விட்டர் பதிவில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
சூர்யாவை மிரட்டிய பாமக நிர்வாகி மீது காவல் துறை வழக்கு பதிந்ததை அடுத்து, அதற்கு முன்னோடியாக விஜய் சேதுபதியை மிரட்டிய அர்ஜூன் சம்பத் மீதும், கோவை மாநகர் போலீஸார் இன்று வழக்குப் பதிவுசெய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.