பிறக்கும் 2022-ம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பில், முழுக்கரும்பு இடம்பெறும் என உறுதியளித்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பச்சரிசி, வெல்லம், உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை உட்பட 20 பொருட்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற உள்ளன. முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் உட்பட 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் இவை தமிழகத்தின் பொங்கலை சிறப்பிக்க உள்ளன.
இந்தப் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததை சிலர் சுட்டிக்காட்டினர். கரும்பைப் பெயரளவில் சேர்ப்பதன்றி, முழுக் கரும்பாக வழங்க வேண்டும் என்று விவசாயப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முழுக்கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்க உத்தரவிட்டுள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி செய்திருக்கிறார்.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு அறிவிப்பையொட்டி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுடச்சுட எதிர்வினையாற்றி உள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், ”கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கல் தொகுப்போடு பொங்கல் பரிசுப் பணமும், முழுக்கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம், கரும்பைக் காணவில்லை. அடுத்து வெளியான அறிவிப்பில் கரும்பு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுப் பணத்தை காணவில்லை. பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று காரமாக தனது பதிவை முடித்திருக்கிறார். எதிர்க்கட்சியின் வலியுறுத்தலை அடுத்து, பொங்கல் தொகுப்பில் பணப் பரிசும் சேர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசியலுக்கு அப்பால், பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பு இடம்பெறுவது கரும்பு விவசாயிகளுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாகும். அரசு மொத்தமாக கொள்முதல் செய்யும் வாய்ப்பு உள்ளதால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது. தொடர்மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டு , சந்தையில் காய்கறிகளின் விலை ஏறத்தொடங்கி உள்ளது. விலையேற்றத்தின் பலனை இடைத்தரகர்களே வழக்கம்போல் உறிஞ்சிக் கொள்வதால், இயற்கை இடர், இடைத்தரகர் என இருபுறமும் விவசாயிகள் இழப்பை எதிர்கொள்கின்றனர். தமிழக அரசின் தற்போதைய முழுக்கரும்பு உத்தரவு, கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான பொங்கலை உறுதி செய்துள்ளது.