மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டபோது, ”இது வாரிசு அரசியல் அல்ல. ஜனநாயக முறைப்படி கட்சியினரிடம் வாக்கெடுப்பு நடத்தித்தான் அவரை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்திருக்கிறோம்” என்று வைகோ விளக்கம் சொன்னார். இருந்தாலும், ”வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சி தொடங்கிய வைகோ, அதே தவறைச் செய்கிறார்” என்று சொல்லி மாநில மதிமுக இளைஞரணி செயலாளர் கட்சியில் இருந்து விலகினார். மூத்த மாநில நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, பொடா புலவர் செவந்தியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் க.அழகுசுந்தரம் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகவில்லை என்றாலும்கூட, வைகோவின் இந்த செயலுக்கு ஒத்துழைப்பு நல்காமல் இருந்துவருகிறார்கள்.
இந்நிலையில், தன் மகன் துரை வைகோவுக்கு பொதுச் செயலாளரின் அதிகாரத்தில் இருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார் வைகோ.
இதுதொடர்பாக, இன்று அவர் கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தலைமைக் கழகச் செயலாளர் பணிகள் என்ற தலைப்பில், 5 விஷயங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
"1. மதிமுக சட்ட திட்ட விதி எண்: 23-ன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
2. கழக சட்ட திட்ட விதி எண்: 26-ன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது. கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக்கழகச் செயலாளர் ஒருங்கிணைப்பார்.
3. கழகப்பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார்.
4. கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக்கழகச் செயலாளரின் பணி ஆகும்.
5. மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக்கழகச் செயலாளரே கவனிப்பார்.
என்று அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார் வைகோ. இதை மதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், அதிருப்தி நிர்வாகிகள் மத்தியில் புலம்பல் முன்னைவிட அதிகரித்துள்ளது.