நடிகர் சூர்யாவுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்

By எஸ்.சுமன்

ஜெய்பீம் திரைப்படத்தை முன்வைத்து, அந்தத் திரைப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவுக்கு, வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த எதிர்ப்பு ஒரு கட்டத்தில் வரம்பை மீறியது. நடிகர் சூர்யாவை தாக்குவோருக்கு பரிசு என்றெல்லாம் கட்சியின் நிர்வாகி அறிவிக்கும் அளவுக்கு மோசமானது. சூர்யா நடித்த திரைப்படம் ஓடும் திரையரங்கில் புகுந்து மிரட்டியவர்கள், படத்தை நிறுத்தவும் அடுத்தநாள் முதல் வேறு படத்தை திரையிடவும் நிர்பந்தம் செய்திருக்கிறார்கள்.

மயிலாடுதுறை திரையரங்கு முன்பாக பாமக ஆர்ப்பாட்டம்

வன்னியர் சங்கம் சார்பில் இழப்பீடும், மன்னிப்பும் கோரி ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஓடிடி தளம் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டது. சூர்யாவுக்கு எதிராகக் கட்சியின் தலைமை திரும்பியதை, தங்களுக்கான செய்தியாக பாமகவினர் உள்வாங்கினர். கட்சி நிர்வாகிகள் சார்பில் பாமகவினர் அடர்த்தியாக இருக்கும் வட மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் அளிப்பதை சடங்காகப் பதிவுசெய்தனர். கட்சியின் தீவிர அபிமானிகள், அநாமதேய ஒரண்டைகளுக்குப் பெயர்போன சமூக ஊடகங்களில் சூர்யாவுக்கு எதிரான சவடால்களில் இறங்கினர். தனிநபர் தாக்குதல்கள் தரம் தாழவும் செய்தன. படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் எங்களது உணர்வுகளை ஜெய் பீம் திரைப்படம் புண்படுத்திவிட்டது என்பது, பாமகவினரின் ஆவேசத்துக்கு அடிப்படையாக இருந்தபோதும், அவர்களில் சிலர் அதை வெளிப்படுத்திய விதம் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் இருந்தது.

சூர்யா-ஜோதிகா குடும்பத்தினர்

இதைத் தொடர்ந்து நேரிடையாகவும் சிலர் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து, சூர்யாவின் குடும்பத்துக்கு காவல் துறை பாதுகாப்புக்கு உத்தரவானது. அதன்படி, சூர்யாவின் குடும்பம் வசித்து வரும் சென்னை தி.நகர் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடிகர் சூர்யாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக 2 மெய்க்காவலர் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ஜெய் பீம் திரைப்படத்துக்கும், நடிகர் சூர்யாவுக்கும் பொதுவெளியில் அதிகரிக்கும் மிரட்டல் மற்றும் நெருக்கடிகளுக்கு திரையுலகமும் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவரான இயக்குநர் பாரதிராஜா படைப்பு சுதந்திரத்தை வலியுறுத்தி அன்புமணி ராமதாஸுக்கு பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் கருணாஸ், பாமகவுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார். திரைக்கலைஞர்களில் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட ஒத்த சிந்தனை கொண்டோரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ஜெய்பீம் திரைப்படத்தின் ஆதாரமான, உண்மைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளை வரவழைத்து, ரூ.15 லட்சம் வைப்பு நிதிக்கான ஆவணங்களை சூர்யா நேற்று(நவ.16) வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE