காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் எழுதிய, புதிய புத்தகத்தை முன்வைத்து எழுந்த சர்ச்சையின் அங்கமாக அவரது நைனிடால் இல்லத்தை எதிர்ப்பாளர்கள் சேதப்படுத்தினர்.
’சன்ரைஸ் ஓவர் அயோத்யா-நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்’ என்ற தலைப்பில் சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்துவத்துவா உடன் இஸ்லாமிய அடிப்படை இயக்கங்களை ஒப்பிட்டு எழுதப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததது. மேலும் நூல் வெளியீட்டு விழாவிலும் அதே கருத்தை தொட்டு சல்மான் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும், இரு பிரிவினருக்கு இடையிலான சமூக இணக்கத்தை கெடுக்கும் வகையிலும் சல்மான் புத்தகம் இருப்பதாக எதிர்ப்புகள் திரண்டன. சல்மான் குர்ஷித்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார், புத்தகத்தை தடை செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் உள்ளிட்டவற்றை எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டனர்.
இதற்கிடையே உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித்தின் இல்லத்தை சூழ்ந்த சிலர் வீட்டை சேதப்படுத்தியும், வீட்டு முகப்பில் தீ வைத்தும் முழக்கமிட்டு சென்றனர்.
அது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை சல்மான் குர்ஷித் சமூக ஊடகங்களில் பகிர, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.