இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனுக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையிலான நிலபேர புகாரை விசாரிக்குமாறு, காவல் துறையின் முன்னாள் உயரதிகாரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய வழக்கு, இன்று(நவ.15) அடுத்த கட்டத்தை எட்டியது.
1994-ல், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது, இஸ்ரோ ரகசியங்களை அண்டை நாடுகளுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், அவரை கேரள போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொய் வழக்கில் கைது செய்து சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதாக, நம்பி நாராயணன் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவானது.
சிபிஐ தனது விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிரூபித்தது. மேலும், கேரள போலீஸார் மற்றும் ஐபி பிரிவின் அதிகாரிகள் என 17 பேர் மீது, போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியது. பல்வேறு அரசியல்வாதிகளின் தலைகளும் இதில் உருண்டன. நீண்ட சட்டப்போராட்டத்தின் முடிவாக, தன் மீதான களங்கத்தைத் துடைத்து நம்பி நாராயணன் விடுதலையானார். சிபிஐ குற்றம்சாட்டிய காவல் துறை அதிகாரிகள் மீதான வழக்குகள் தொடர்கின்றன.
அந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான எஸ்.விஜயன் என்பவர், நம்பி நாராயணனுக்கு எதிரான புதிய புகாருடன் விசாரணை நீதிமன்றத்தை அணுகினார். ’நம்பி நாராயணன், சிபிஐ அதிகாரிகளுடன் நிலபேரத்தில் ஈடுபட்டதன் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளை சரிகட்டினார்’ என்று விஜயன் குற்றம்சாட்டினார். இதற்கு ஆதாரமாக, தமிழகத்தின் திருநெல்வேலியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் தொடர்பான வில்லங்கச் சான்றுகளை சமர்ப்பித்திருந்தார். அவற்றை விசாரித்த விசாரணை நீதிமன்றம், விஜயனின் புகாரை தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தை விஜயன் அணுகினார்.
அங்கே, விஜயனின் மனுவை விசாரித்த நீதிபதிகள், நம்பி நாராயணன் - சிபிஐ அதிகாரிகள் இடையே நிலபேரம் நடந்ததை நிரூபிக்க வில்லங்கச் சான்றுகள் போதாது; உரிய நிலபேர பத்திரங்களுடன் விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டனர்.
உரிய ஆவணங்களுடன் விசாரணை நீதிமன்றத்தில் புதிதாக மனுதாக்கல் செய்யலாம் என்றும், அதன் அடிப்படையிலான வழக்கில் பதில் அளிக்கும்படி நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் முன்னதாக நீதிமன்றம் விஜயனுக்கு உறுதியளித்திருந்தது. இதன் மூலம், முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் முன்பாக மற்றொரு சட்டப் போராட்டம் விஸ்வரூபம் எடுக்க உள்ளது.