கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் போக்சோவில் கைதானது ஏன்?

By எஸ்.எஸ்.லெனின்

கோவை, சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 பயின்ற 17 வயது மாணவி, நவ.11 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்ரவர்த்தி என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளியின் முதல்வராக இருந்த மீரா ஜாக்சன் என்பவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்த்து. மீரா, போக்சோவில் கைதான விவகாரம் குறித்து பொதுவெளியில் சிலர் ஐயம் எழுப்பினார்கள்.

பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா

சின்மயா பள்ளியில் படித்துவந்த மாணவி, ஆசிரியர் மிதுனின் பாலியல் தொந்தரவு காரணமாக மனமுடைந்திருக்கிறார். இதனால் அப்பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று, தனது வீட்டின் அருகிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். அதன் பின்னும் ஆசிரியர் மிதுன், மாணவியை தொந்தரவு செய்திருக்கிறார். தற்கொலை சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையிலும், மாணவியின் செல்போன் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆசிரியர் மிதுனை போக்சோ உள்ளிட்ட சட்டங்களின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.

மாணவி தற்கொலையால் கொதித்தெழுந்த மாணவர் இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தில், சின்மயா பள்ளியில் முதல்வராக பணியாற்றிய மீரா ஜாக்சனை கைது செய்யும்படி வலியுறுத்தப்பட்டது. மீரா கைது செய்யப்படும்வரை மாணவியின் சடலத்தைப் பெற மாட்டோம் என்று பெற்றோர் தரப்பில் தெரிவித்தனர். உடனடியாக, மீரா மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் அறிவித்தனர்.

பின்னர், பெங்களூருவில் பதுங்கியிருந்த மீராவை கைது செய்தனர். பிறகு, மீரா கைது செய்யப்பட்டதற்கு போலீசார் விளக்கம் தந்தனர்.

நேற்று நடந்தேறிய மாணவியின் இறுதி ஊர்வலம்

”ஆசிரியரின் பாலியல் தொந்தரவு குறித்து அப்போது பள்ளி முதல்வராக இருந்த மீராவிடம் மாணவி முறையிட்டிருக்கிறார். சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிந்திருந்த மீரா, உள்நோக்கத்துடன் அதை மறைத்ததுடன், மாணவிக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார். சட்டப்படி, நடந்த சம்பவம் குறித்து அவர் உடனடியாக காவல் துறையிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவரும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதானார். மேலும் காவல் துறைக்கு கிடைத்திருக்கும் சில சாட்சியங்களின் அடிப்படையில், இவரைப் போன்று வேறு எவரேனும் மாணவி தற்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகிறோம்” என்று, கோவை மாவட்ட காவல் துறை உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மாணவியின் தற்கொலை கடிதத்தில் இடம்பெற்றிருக்கும், ‘யாரையும் சும்மா விடக்கூடாது..’ என்ற வாசகம் காவல் துறையினரையும் உலுக்கியிருக்கும் போல!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE