இந்தியாவில் முதல்முறையாக பசுக்களுக்கான அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தை, உத்தர பிரதேச மாநிலம் அறிமுகப்படுத்துகிறது.
பால் வற்றியதால் கைவிடப்பட்ட பசுக்களுக்கு தங்குமிடம், அவற்றின் பராமரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு போன்ற பசுக்களின் மீது நேசம் பாராட்டும் முன்னோடி திட்டங்கள் பலவற்றை உத்தர பிரதேச மாநிலம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக, அவசரகால ஆம்புலன்ஸ் வசதிக்கான திட்டத்தை உபி அரசு அறிவித்துள்ளது. இதன்படி பிரத்யேக 3 இலக்க அவசர அழைப்பைத் தொடர்பு கொண்டால், உடனடியாக ஆம்புலன்ஸ் வந்துசேரும். அழைப்பு கிட்டிய 20 நிமிடத்தில் சென்று சேருமாறு 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளதாக கால்நடைத் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் சௌத்ரி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தனி கால்சென்டர் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
ஆம்புலன்ஸ் தோறும், ஒரு கால்நடை மருத்துவர், 2 உதவியாளர்கள் தாயார்நிலையில் இருப்பார்கள். இந்த முன்னோடி திட்டம், முதல்கட்டமாக மதுரா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டிசம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வருகிறது.
அடுத்த ஆண்டில் உபி சட்டப்பேரவை தேர்தல் வருவதை அடுத்து. அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாகத் தயாராகி வருகின்றன. ஒருசில கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் மீண்டும் பாஜக ஆட்சியே அங்கு அமையும் என்ற தகவல்களால், அக்கட்சியினர் அங்கு உற்சாகமாக களமிறங்கி உள்ளனர். அதற்கேற்ப பாஜகவின் ஓட்டுவங்கியை குறிவைத்து, இந்தப் பசு ஆம்புலன்ஸ் வரிசையில் மேலும் பல திட்டங்களை அறிவிக்க ஆளும் பாஜக அரசு மும்முரமாக உள்ளது.