சிவகங்கையும் சிதம்பரமும்... 24

By ஒய்.பழனியப்பன் - காங்கிரஸ்

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுடைய தகப்பனார் சாமியாபிள்ளை, ஒரு காலத்தில் காளையார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அவருக்குப் பின்னால், அந்தப் பொறுப்பை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குடும்பத்துக்குள் வைத்து கோலோச்சிய குடும்பம் ஆட்டுக்காலி மைக்கேல் உடையார் குடும்பம்.

ஆட்டுக்காலி மைக்கேல் உடையார் என்று சொன்னால், காளையார்கோவில் பகுதியில் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வளவு செல்வாக்கான மனிதர். சிவகங்கை காங்கிரஸின் பிரதான தலைவர்களாகப் பார்க்கப்படும் ஆர்.வி. சுவாமிநாதன், உ. சுப்பிரமணியன், ப.சிதம்பரம் , சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட அத்தனை பேரோடும் வஞ்சகம் இல்லாமல் வாஞ்சை காட்டியவர் ஆட்டுக்காலி மைக்கேல் உடையார்.

1967-ல் காளையார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவராக பொறுப்புக்கு வந்த உடையார் 1995-ல், தான் இறக்கும் தருணம் வரை அந்தப் பொறுப்பில் இருந்தவர்.

சந்தியாகு

அவருக்கு பிறகு, அவருடைய மகன் சந்தியாகு வட்டார தலைவராக நியமிக்கப்பட்டார். அன்புத் தலைவர் சிதம்பரத்துக்கு நூறு சதவீதம் நம்பிக்கைக்குரிய குடும்பம் அந்தக் குடும்பம். தமாகா தொடங்கியபோது, சந்தியாகுவை மாவட்ட இளைஞர் அணித் தலைவராக நியமித்தார் சிதம்பரம். 1996-ல், தமாகா சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட சந்தியாகு, அந்தப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் திறம்பட பணியாற்றினார்.

தலைவர் சிதம்பரம் போட்டியிட்ட அத்தனை தேர்தலிலும் காளையார்கோவில் பகுதியில் சிறுபான்மையினர் மற்றும் உடையார் சமூகத்து வாக்குகளை ஒட்டுமொத்தமாக திரட்ட, சந்தியாகு குடும்பம் நிரம்பப் பயன்பட்டது.

சந்தியாகு குடும்பத்துக்கு காளையார்கோவிலில் பெட்ரோல் பங்க் ஒன்று உண்டு. 2009-ல் அந்த பங்க் சம்பந்தமாக சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்தும் பங்கை இயக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அன்புத் தலைவர் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருக்கிறார். தொட்டது தொண்ணூறுக்கும் அவரைத் தொடர்பு கொள்ளமுடியாது என்பதால், தலைவரின் பிள்ளை இளைய நிலா கார்த்தி சிதம்பரத்திடம் விஷயத்தைக் கொண்டு போகிறார்கள். ஆனால், தம்பியிடம் இருந்து தரமான பதில் இல்லை. காங்கிரஸைத் தோளில் சுமந்த மரியாதைக்குரிய அந்தக் குடும்பத்துக்கு இந்த விஷயம் மிகுந்த மன உளைச்சலைத் தந்துவிட்டது.

சந்தியாகு குடும்பம் இப்படியான சிக்கலில் இருப்பது, அப்போது புள்ளியியல் துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனின் காதுக்கும் போகிறது. நிகழ்ச்சி ஒன்றில் சந்தியாகுவை அழைத்துப் பேசிய வாசன், இதுகுறித்து பாந்தமாக விசாரித்ததுடன் உரிய ஆவணங்களுடன் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்கிறார். அப்போதைக்கு மரியாதைக்காக தலையாட்டி வைத்த சந்தியாகு, வாசனை சந்திக்கப் போகவில்லை. தலைவர் சிதம்பரம்தான் நமக்கான அரசியல் தலைவர். அவரை மீறி அப்படியெல்லாம் போய்விடக்கூடாது. வாசனைப் பார்த்தால், பெட்ரோல் பங்க் பிரச்சினை சரியாகிவிடலாம். ஆனால், அரசியலில் மரியாதை இருக்காது என சந்தியாகு நினைத்தார். அதனால்தான் வாசனை பார்க்கப் போகவில்லை.

ஜி.கே.வாசன்

சந்தியாகு இப்படி நினைத்ததால், கடைசிவரை அந்தப் பெட்ரோல் பங்க் பிரச்சினை சாதகமான சூழலுக்கு வரவில்லை. அதனால், இன்னொரு இடத்தில் இன்னொரு கம்பெனியின் பெட்ரோல் பங்கை நிறுவவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் சந்தியாகு. அதற்குப் பிறகும் அந்தக் குடும்பம் காங்கிரஸில்தான் இருந்தது.

ஒரு கட்டத்தில், அன்புத் தலைவர் சிதம்பரத்தின் அரசியல் வாரிசாக கார்த்தி முன் வரிசைக்கு வந்தார். ஆனால், சந்தியாகு குடும்பத்துக்கு தலைவர் சிதம்பரத்திடம் கிடைத்த மரியாதை, அவரது தவப் புதல்வரிடம் கிடைக்கவில்லை. அதனால், பொது இடங்களில் மரியாதைக்குறைவான வார்த்தைகளை சந்தியாகு எதிர்கொண்டார். ஒரு கட்டத்துக்குமேல் அவமானங்களைச் சகித்துக்கொண்டு, தன்மானத்தை விட்டுக்கொடுத்து சந்தியாகுவால் காங்கிரஸில் நீடிக்க முடியவில்லை. அதனால், இந்த முறை வாசன் அழைக்காமலேயே அவரைப் பார்க்கப் போனார் சந்தியாகு. இப்போது அந்தக் குடும்பமே ஒட்டுமொத்தமாக தமாகாவில் இருக்கிறது. காளையார்கோவிலில், தனக்கிருந்த முக்கிய அடையாளத்தைத் தொலைத்துவிட்டது காங்கிரஸ்.

கார்த்தி சிதம்பரம்

சந்தியாகு தமாகாவுக்கு தடம்மாறிய பிறகு, அவரது மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்தினார். இரண்டுமே வாசன் தலைமையில். காலை 10 மணிக்கு திருமணவிழாவுக்கு வந்து, மதியம்வரை சந்தியாகுவோடு இருந்துவிட்டுப் போனார் வாசன். இந்த மரியாதையைத் தானே, மெத்தப்படித்த எங்களிடம் எதிர்பார்த்தது அந்தக் குடும்பம்?

காசு பணத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நாங்கள் எதிர்பார்த்தது மரியாதையைத்தான்.

ப.சிதம்பரம் - வாசன்

ஆனால், காங்கிரஸில் அந்த மரியாதை கிடைக்கவில்லை. மரியாதை இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை? வாசனிடம் எங்களுக்கு உரிய மரியாதை இருக்கிறது. தமாகாவில் நாங்கள் மரியாதையான இடத்தில் இருக்கிறோம் என்று மனம் குளிரச் சொல்கிறது சந்தியாகுவின் குடும்பம். இருப்பவர்களை எல்லாம் இப்படியே அவமானப்படுத்தி அனுப்பிவிட்டு, யாரைவைத்து எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறோமோ தெரியவில்லை.

ராகுல் - ப.சிதம்பரம்

காங்கிரஸ்காரர்கள் அனைவருக்குமே, இளம் தலைவர் ராகுல்காந்தியுடன் ஒருமுறையேனும் கைகுலுக்க மாட்டோமா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால், அவர் பெயரைச் சொல்லி, அவர் படத்தைப் போட்டு வாக்குக் கேட்டு டெல்லிக்கு ஃப்ளைட் ஏறிய ஒரு பிள்ளை, ராகுல் காந்தி வணக்கம் சொன்னபோது எப்படியான ‘மரியாதையுடன்’ ரியாக்ட் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரத்தை, நான் இதற்கு முன்பு இங்கே பகிர்ந்திருந்தேன். இதோ, இந்த வீடியோவையும் பாருங்கள்.

பந்தியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என கவனித்து பரிமாறுவது மட்டுமல்ல... அவர்கள் சாப்பிட்டு எழுந்த பிறகு கைகழுவ தண்ணீர் ஊற்றுவதும் ஈரக் கை துடைக்க துண்டு கொடுப்பதும் நம் செட்டிநாட்டுப் பகுதி விருந்தோம்பலின் உச்சம். அன்புத் தலைவர் சிதம்பரம் தற்போது கோவா மாநில காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். அண்மையில், இளம் தலைவர் ராகுல் காந்தி கோவா சென்றிருந்தார். அப்போது பேக்கரி ஒன்றில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுத் திரும்பிய ராகுல் காந்திக்கு கைகழுவ தண்ணீர் ஊற்றுகிறார் தலைவர் சிதம்பரம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதி தான் இது.

ஆயிரம் தான் இருந்தாலும் அன்புத் தலைவர் சிதம்பரம் எத்தனை பெரிய சீனியர், எம்புட்டுப் பெரிய மேதை. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், தனது இடத்துக்கு வந்த இளம் தலைவர் ராகுல் காந்திக்கு சாப்பிட்டதும் கைகழுவ தண்ணீர் ஊற்றுகிறார். அந்தப் பணிவும் அடக்கமும் மரியாதையும் அவர் பெற்ற பிள்ளைக்கு இல்லையே என்பதுதானே, பெரும்பாலானவர்களின் ஆதங்கமே. அப்பாவின் கொள்கை பிள்ளையிடம் இருந்திருந்தால், சந்தியாகுக்களை நாம் இவ்வளவு சட்டுனு இழந்திருக்கமாட்டோம்; இன்னும் இழந்து கொண்டிருக்க மாட்டோம்!

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு செய்தி என் காதுக்கு வருகிறது. சிவகங்கை மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஏலம்மாள். அண்மையில், காரணமே சொல்லாமல் ஏலம்மாளை மாற்றிவிட்டு, அவருடன் பணியாற்றிய இன்னொரு பெண்மணியை அந்தப் பொறுப்பில் உட்காரவைத்திருக்கிறார்கள். ஏலம்மாள் என்னிடம் பேசினார். அவர் சொன்னதை எல்லாம் கேட்டபோது, இப்படியெல்லாமா அசிங்கம் நடக்கிறது? சிவகங்கை காங்கிரஸை இவர்களெல்லாமா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்? என்று விக்கித்துப் போனேன். ”இதற்கு காரணமானவர்கள் சிவகங்கை பக்கம் வந்தால் சட்டையைப் பிடித்து அடிப்பேன்” என்று சொன்னார் ஏலம்மாள். இன்னும் கூடுதலாகவே அவர் பேசினார். அதையெல்லாம் பொதுவெளியில் பதிவிட முடியாது என்றாலும், அவரது அந்தக் கோபமும் ஆத்திரமும் உண்மையான காங்கிரஸ்காரனான எனக்கு நியாயமாகவே பட்டது.

‘தான் பார்க்காத வயலும் தரிசாகிப் போகும்’ என்று கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை உண்டு. அப்படித்தான் சிவகங்கை மாவட்ட காங்கிரஸையும் சிலர் தரிசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

(1984-ல், அன்னை இந்திரா காந்தி படுகொலைசெய்யப்பட்டபோது நாடெங்கிலும் பலருக்கும் நேரு குடும்பத்தின் மீது இனம்புரியாத ஒரு பரிவு ஏற்பட்டது. அது பலரையும் காங்கிரஸ் பேரியக்கத்தை நோக்கி ஈர்த்தது. அப்படி அந்த சமயத்தில், சிவகங்கையின் ஒரு சிறு நகரத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் சொந்தபந்தங்கள் அனைவரும் திமுகவைவிட்டு காங்கிரஸுக்கு வந்தார்கள். அந்தக் குடும்பத்தின் பிதாமகனாக இருந்த ஒருவர் அதன் பிறகு வந்த அத்தனை தேர்தல்களிலும் கை சின்னத்தின் வெற்றிக்காக கைக்காசையும் செலவழித்து உழைத்தார். அப்படிப்பட்டவரும் ஒருகட்டத்தில் எங்களுக்குக் கருவேப்பிலையாகிப் போனார். அடுத்து அவரைப் படிப்போம்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 23

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE