ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடல்; 100% வீட்டிலிருந்தே பணி

By எஸ்.எஸ்.லெனின்

காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறும் டெல்லியை காப்பாற்ற, பொதுமுடக்கத்துக்கு இணையான உத்தரவுகளை மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.

தீபாவளிக்கு வேகம்பிடித்த டெல்லியின் காற்று மாசுபாடு நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. அதன் உச்சமாக, உச்ச நீதிமன்றமே இன்று(நவ.13) மாநில மத்திய அரசுகளை ஒரு பிடி பிடித்தது. “மூச்சுத் திணறும் டெல்லியை காப்பாற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். வீட்டில்கூட முகக்கவசம் அணிந்து நடமாட வேண்டியிருக்கிறது. பள்ளி செல்லும் பிள்ளைகளின் நுரையீரல் என்னாவது? மாநில அரசு ஏன் பொதுமுடக்கம் பிறப்பிக்கக் கூடாது? அண்டை மாநிலங்களின் வயல் கழிவு எரிப்புகளால் விளையும் மாசை குறைக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன?” என்று சராமாரியாய் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

டெல்லி இந்தியா கேட்

இதைத் தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதிய உத்தரவுகள் சிலவற்றைப் பிறப்பித்தார். அதன்படி, “திங்கள்கிழமை முதல் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும். அனைத்து அரசு அலுவலர்களும் 100 சதவீதம் வீட்டிலிருந்தே பணியாற்றட்டும். தனியார் நிறுவனங்கள் அதற்கொப்ப உத்தரவுகளை பிறப்பிக்கட்டும். மாசு அளவை குறைப்பதற்கான அவசரகால ஏற்பாடாக நாளை முதல் 4 நாட்களுக்கு கட்டிடப்பணிகள் தடை செய்யப்படுகின்றன” என்று, பொதுமுடக்கத்துக்கு இணையான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

400 என்ற அளவை தொட்டாலே காற்று மாசு அபயகரமானதாக கொள்ளப்படும் நிலையில், இன்று(நவ.13) மாலை நிலவரப்படி டெல்லியின் காற்று மாசு குறியீடு 427-ஐ தாண்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE