என் கேள்விக்கென்ன பதில்?

By எஸ்.சுமன்

தேசத்துக்கு விடுதலை கிடைத்தது தொடர்பாக, பாலிவுட் நடிகை கங்கனா ரானவத் தெரிவித்த கருத்துகள் பொதுவெளியில் கொதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சுய விளக்கம் ஒன்றை இன்று அவர் வெளியிட்டார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் பதிலளித்த கங்கனா ரானவத், தேசத்துக்கு விடுதலை கிடைத்ததை பிச்சை என்றும், விடுதலை போராட்டத் தியாகிகளை அவமாரியாதை செய்யும் வகையிலும் பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதில் அரசியல் கட்சிகள் தொடங்கி சகல தரப்பினரும் கங்கனாவுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். தனது பேச்சுக்கு கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், பத்மஸ்ரீ விருதைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கொந்தளித்தனர்.

கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பதிவுகளில் ஒன்று

அவர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக, இன்று(நவ.13) கங்கனா பதிலளித்தார். “1857-ல் நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற போரை அறிவோம். அதுபோல 1947-ல் நாட்டு விடுதலைக்காக ஏதேனும் போர் நடந்ததா என்பது குறித்து எவரேனும் எனது கவனத்துக்கு கொண்டுவந்தால், பத்ம விருதை திருப்பியளித்து மன்னிப்பும் கேட்கிறேன். தயவுசெய்து உதவுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

மேலும் பல வாதங்களையும், விளக்கங்களையும் பதிவு செய்திருக்கும் கங்கனா, தனது தரப்புக்கான ஆவணங்களாக, வரலாற்று பாட நூல் ஆதாரங்கள் என புத்தக பக்கங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறார். ஆனால், அது என்ன புத்தகம் என்பதைக் குறிப்பிடவில்லை.

அண்மையில், ஆட்சேபகரமான மற்றும் போலி செய்திகள் பலவற்றை கங்கனா ரனாவத் தொடர்ந்து ட்விட்டரில் பதிந்துவந்ததால், அவரது கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. அதன் பிறகு, இன்ஸ்டாகிராமில் தனது பதிவுகளை கங்கனா தொடர்ந்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE