கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வரும் போக்சோவில் கைது

By காமதேனு

கோவை தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர், பாட ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர், பொதுமக்கள் போராடி வரும் நிலையில், குற்றச்சாட்டுக்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளி முதல்வர் மீதும் இன்று(நவ.13) வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்னர் அப்பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றார். பிறிதொரு பள்ளியில் மாணவியை சேர்க்க அவரது பெற்றோர் முயற்சி செய்து வருகையில், நேற்று முன்தினம்(நவ.11) தனது வீட்டில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில், மாணவியின் ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவியை தொடர்ந்து பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாக தெரியவந்தது. இந்த ஆசிரியரிடமிருந்து தப்பிக்கவே பள்ளியிலிருந்து மாணவி டிசி பெற்றதாகவும், அதன் பிறகும் ஆசிரியரின் தொந்தரவு தொடர்ந்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே, மாணவிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன . காவல் துறை விசாரணையில், ஆசிரியருக்கு எதிராக மாணவி அளித்த புகாரை பள்ளி நிர்வாகம் உதாசீனம் செய்ததாகவும், கவுன்சிலிங் என்ற பெயரில் மாணவிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பள்ளி முதல்வரான மீரா ஜாக்சன் என்பவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் தற்போது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE