வாரிசு அரசியலுக்கு எதிராக வரிந்துகட்டும் மதிமுகவினர்

By கே.கே.மகேஷ்

1993-ம் ஆண்டு, நவம்பர் மாதம். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வைகோவைக் கட்சியிலிருந்து நீக்குவதாகத் திமுக செயற்குழு முடிவெடுத்தது. அடுத்த நாளே, “நாங்கள்தான் உண்மையான திமுக. கறுப்பு சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும், அண்ணா அறிவாலயமும் எங்களுக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாடினார் வைகோ.

28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பப் போகிறது. “நாங்கள்தான் உண்மையான மதிமுக. சிவப்பு கறுப்பு சிவப்பு கொடியும், தாயகமும் எங்களுக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள். கட்சியிலிருந்து அவர்களை நீக்கினால், அடுத்த நாளே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, 1993-ல் வைகோ சொன்னதையே அவர்களும் சொல்வார்கள். இதனால் செய்வதறியாமல் தவிக்கிறார் வைகோ.

என்ன பிரச்சினை?

தமிழக வரலாற்றிலேயே, கட்சியில் இருப்பவர்களைவிட விலகியவர்களே அதிகம் என்ற தனிப்பெருமை கொண்ட இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதில் சிலரை மட்டும்தான் திமுக இழுத்தது. மற்றவர்களை எல்லாம் வைகோவே தன்னுடைய கட்டுக்கடங்கா கோபத்தாலும், தப்புத்தப்பான முடிவுகளாலும் வழியனுப்பிவைத்தார் என்பதே வரலாறு.

இன்றைய பிரச்சினைக்குக் காரணம், துரை வைகோவின் கையில் கட்சியைக் கொடுக்கும் அவரது முடிவு. கருணாநிதியின் வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சியைவிட்டே வெளியேறியவர், இன்று அதே தப்பைச் செய்கிறபோது எப்படிச் சகித்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். அவர்களுக்குத் தலைமை வகிப்பவர், கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி. சட்டத் துறைச் செயலாளர் தேவதாஸ், ஆட்சி மன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (இவரது தந்தை ராஜரத்தினம் பிள்ளை செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவின் முக்கியத் தளபதியாக இருந்தவர், தேர்தலில் எதிர்த்து நின்று பக்தவசலத்தைத் தோற்கடித்தவர்), அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் புலவர் செவ்வந்தியப்பன், கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகுசுந்தரம், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை டாக்டர் சந்திரசேகரன், வழக்கறிஞர் வீரபாண்டி ஆகிய 7 பேரும் இவ்விஷயத்தில் ஒரே அணியாகச் செயல்படுகிறார்கள்.

இவர்கள் 7 பேரும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள். அதாவது, கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் பொலிட் பீரோ மாதிரி. இவர்கள் எடுக்கிற முடிவைத்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்ற முடியும் என்று மதிமுகவின் சட்டதிட்ட விதி சொல்கிறது. ஆனால், துரை வைகோ நியமனம் தொடர்பாக இவர்களிடம் வைகோ முன்கூட்டியே கருத்துக் கேட்கவும் இல்லை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு இவர்கள் போகவும் இல்லை.

மல்லை சத்யா

கூட்டத்தைப் புறக்கணித்த நிர்வாகிகளில் ஒருவரிடம் பேசியபோது, ”என்னுடைய பெயர் வேண்டாம். கட்சி விதிகளின்படி உட்கட்சி விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசினால், என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். அதை நாங்கள் விரும்பவில்லை. மதிமுகவில் மொத்தம் 17 உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் உண்டு. அதில் தஞ்சை துரை பாலகிருஷ்ணனும், தூத்துக்குடி நாசரேத் துரையும் இறந்துவிட்டார்கள். மீதி 15 பேரில் கணேசமூர்த்தி எம்.பி மற்றும் எம்எல்ஏ-க்கள் டாக்டர் சதர்ன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை புதூர் பூமிநாதன் ஆகிய 4 பேரும் திமுக உறுப்பினர் என்று ‘பி ஃபார்ம்’ தாக்கல் செய்து மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சியிருப்பது 11 பேர்தான். மல்லை சத்யாவும் திமுக உறுப்பினர் என்று ‘பி ஃபார்ம்’ கொடுத்துத் தேர்தலில் போட்டியிட்டவர்தான். அவருக்குமே வைகோவின் இந்தச் செயல் பிடிக்கவில்லை. ஆக, உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 11 பேரில் 7 பேர் வைகோ மகனுக்குப் பதவி கொடுத்ததை எதிர்க்கிறோம். துரை வைகோவை ஆதரிக்கும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் யாரென்றால் வைகோ, நெய்வேலி செந்திலதிபன், கோவை ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், இசைவாணன் ஆகிய 4 பேர் மட்டும்தான்.

வைகோ மகனை தலைமைக் கழகச் செயலாளராக நியமித்த இவர்களது முடிவு செல்லாது. கடந்த அக்டோபர் 20-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மொத்தம் 106 பேர் பங்கேற்றதாகவும், அதில் 104 பேர் துரை வைகோவுக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்று வாக்களித்ததாகவும் வைகோ சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பலரின் பதவியே செல்லாது. அவ்வளவு ஏன் வைகோவின் பதவியும் செல்லாது. ஏனென்றால், மதிமுகவின் சட்டதிட்டப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளை, ஒன்றியம், வட்டம், நகரம், பொதுக்குழு, செயற்குழு, மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய, நகர, பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் ஓட்டு போட்டுத்தான் கழகப் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய முடியும்.

ஆனால், கட்சி சிறுத்துப்போனதால், கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தலையே நடத்தவில்லை. நிறைய நிர்வாகிகள் வெளியேறியும்விட்டார்கள். இதனால், காலியாக இருந்த இடத்துக்கும், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமன முறையில்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். இப்போதுள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் இப்படி நியமிக்கப்பட்டவர்கள்தான். எனவே, வைகோவால் எங்களை நீக்க முடியாது. நாங்களும் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். காந்தியடிகள் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினாரோ, அப்படி நாங்களும் நடத்துவோம்” என்றார் அவர்.

புதூர் பூமிநாதன்

மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்

இதற்கிடையே, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர்களான ஆர்.எம்.சண்முகசுந்தரம், புலவர் செவந்தியப்பன் ஆகியோரைத் தூக்கிவிட்டு வேறு மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவெடுத்துவிட்டார் வைகோ. கடந்த 29-ம் தேதி தேவர் ஜெயந்திக்காக மதுரை வந்த வைகோ, தமிழ்நாடு ஓட்டலில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், ”சிவகங்கை மாவட்டச் செயலாளராக இவர்களில் யாரை நியமிக்கலாம்?” என்று 2 பெயர்களை முன்மொழிந்தார். ”ஏன், உங்களோடு பொடா காலத்தில் சிறையில் இருந்த புலவர் செவ்வந்தியப்பன் நல்லாத்தானே இருக்காரு?” என்று நிர்வாகிகள் சிலர் அப்பாவியாகக் கேட்க, ”அவரு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதில்ல” என்று வைகோ சொல்லியிருக்கிறார். இதேபோன்ற கேள்வியை விருதுநகர் மாவட்டத்தினரிடம் கேட்டபோது, ”சண்முகசுந்தரம் இன்றைய அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அப்பா தங்கப்பாண்டியன் காலத்து அரசியல்வாதி. 1991-லேயே திமுக வேட்பாளராகக் களமிறங்கியவரு. கட்சிக்காக உழைச்சே வீணாப்போனவங்களை ஏன் கடைசி காலத்துல அவமானப்படுத்தணும்?” என்று கேட்டிருக்கிறார்கள் சிலர். இப்போதைக்கு அந்த முடிவைத் தள்ளிப்போட்டிருக்கிறார் வைகோ.

செவந்தியப்பன்

இதுகுறித்து அந்த மாவட்டச் செயலாளர்களில் ஒருவரிடம் பேசியபோது, ”வைகோவின் பேச்சாற்றல், ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர் காட்டிய அக்கறையால் அவருடன் வந்தோம். எத்தனையோ பேர் கட்சியில் இருந்து வெளியேறினாலும், நாங்கள் விரும்பித்தான் அவருடன் இருந்தோம். வாரிசு அரசியல் கூடாது... கூடாது... என்று அவர் சொன்னதைக் கேட்டு வளர்ந்த எங்களால், எப்படி வாரிசு அரசியலை ஏற்க முடியும்? சென்னை தாயகம் இருப்பதுபோல, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை போன்ற ஊர்களில் நகர் மையத்தில் கட்சி அலுவலகம் இருக்கிறது. அவற்றின் மதிப்பு 500 கோடியைத் தாண்டும். அதைத் தன் குடும்பச் சொத்தாக்க நினைக்கும் வைகோவுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார்.

”வேறு கட்சிக்குப் போகும் முடிவில் இருக்கிறீர்களா?” என்று கேட்டபோது, ”இப்போது திமுகவுக்குப் போக முடியுமா? வைகோவே திமுகவில்தானே இருக்கிறார். திராவிடச் சிந்தனை உள்ள எவராலும் அதிமுக, பாஜக பக்கம் போக முடியாது. இப்போதைக்குத் தேர்தலும் வரவில்லை. நாங்கள் எல்லாம் மூத்த நிர்வாகிகள். 60 முதல் 80 வயதுக்காரர்கள். எனவே, அப்படியொரு முடிவெடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. சுயமரியாதைக்கான போராட்டம் இது. பொறுக்க முடியாமல் ஒருநாள் எங்களைக் கட்சியில் இருந்து நீக்குவார் வைகோ. அப்போது வீதிக்கு வருவோம், பத்திரிகையாளர்களிடம் பேசுவோம்” என்றார்.

இதுகுறித்து வைகோவுக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசியபோது, ”கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சிலர் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். வயதும் ஆகிவிட்டது. அவர்களை மாற்றிவிட்டு, இளைஞர்களை நியமித்தால்தான் தன்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து அவர்களும் ஓடுவார்கள் என்பது துரை வைகோவின் விருப்பம். முதிய நிர்வாகிகளோ, பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ஏதேதோ பேசுகிறார்கள். கட்சியை உடைக்க முடிந்தால் உடைத்துக்கொள்ளட்டும்” என்றார்.

ம.பொ.சி-யின் ’தமிழரசு’ கட்சி உடைந்தபோது நாவலர் நெடுஞ்செழியன் அடித்த ‘ஜோக்’ நினைவுக்கு வருகிறது. “அணுவைப் பிளக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொன்னபோது நான் நம்பவில்லை. இப்போது நம்புகிறேன். வெறும் 2 பேர் மட்டுமே இருக்கிற ம.பொ.சி-யின் கட்சியே இரண்டாகப் பிளக்கும்போது, அணுவைப் பிளக்க முடியாதா என்ன?”

ஆக, மதிமுகவும் பிளவுபடலாம்!

VIEW COMMENTS