“விருதுகளைத் தேடிச் சென்றவரல்ல அப்பா!”

By காமதேனு

பத்ம விருதுகள் தொடர்பான செய்திகளுக்கு நடுவில், பலரது பால்ய கனவுகளுக்கு வண்ணம் சேர்த்த, மறைந்த ஓவியர் சங்கருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது குறித்து ஏனோ அதிகம் பேசப்படவில்லை. நவம்பர் 9-ல் டெல்லியில் நடந்த விழாவில், சங்கரின் மகள் ராதா அந்த விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் கையால் பெற்றுக்கொண்டார்.

2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளின் பட்டியலில், 108-வது நபராக இடம்பெற்றிருந்த கே.சி.சிவசங்கர் எனும் பெயரைப் பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லைதான். நமக்கு ‘அம்புலிமாமா’ இதழில் விக்ரமாதித்தன் - வேதாளம் கதைகளுக்கு வரைந்த சங்கராக, தனது ஓவியங்கள் மூலம் மன்னர் காலத்தைக் கண்முன் காட்டிய கலைஞராகத்தானே அவர் அறியப்பட்டிருக்கிறார்! அதேவேளையில், தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழக வாசகப் பரப்பில் போற்றப்படும் கலைஞரான சங்கரின் குடும்பத்துக்கு, தமிழக அரசு உட்பட யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம். விருதுபெறும் பிரபலங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை, சாமானியக் கலைஞர்களுக்கு யாரும் தருவதில்லை - ஊடகங்கள் உட்பட!

தனது தந்தையின் சார்பாக, விருதைப் பெற்றுக்கொண்டு டெல்லியிலிருந்து திரும்பியிருக்கும் ராதாவிடம் பேசினோம். “அப்பாவுக்கு மட்டுமல்ல. பத்ம விருதுபெற்ற பல ஆளுமைகளுக்கும் இதே நிலைதான். ஆனால், சாமானியரான நான், என் அப்பாவுக்கான விருதை அவரது சார்பில், குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக்கொண்டதும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரிடம் வாழ்த்து பெற்றதும் நெகிழ்ச்சி தந்தன” என்றார்.

“சங்கரின் மகள் என்கிற முறையில் உங்களிடம் அவரைப் பற்றி யாரேனும் நினைவுகூர்ந்தார்களா?” என்று கேட்டபோது, “பிரதமர் மோடியிடம் அப்பாவைப் பற்றிச் சொன்னபோது, ‘ஆம், எனக்குத் தெரியும்’ என்றார். குடியரசுத் தலைவரும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். இதே வார்த்தைகளைக் கூடுதல் மகிழ்ச்சியுடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் சொன்னார்” என்று சொன்ன ராதா, “அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் அல்லவா! ‘சந்தமாமா’ இதழில் வரைந்ததன் மூலம், தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் அப்பா” என்கிறார். விருதுபெற வந்திருந்த ஆந்திர ஆளுமைகள் சிலர் ராதாவிடம், சங்கர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்களாம்.

நடிகரும் ஓவியருமான சிவகுமாருடன் சங்கரும் அவரது மகள் ராதாவும்

தன் வாழ்நாளின் இறுதிவரை எண்ணற்ற ஓவியங்களை வரைந்து எத்தனையோ பேரின் கற்பனைகளுக்கு அடித்தளமிட்ட சங்கர், விருதுகள் குறித்து அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. அவராக விருதுகளைத் தேடிச் சென்றதில்லை என்றாலும், விருது கிடைத்தால், ‘பரவாயில்லை. என் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி’ என்று மட்டும் சொல்வாராம். “அப்பாவுக்கு, ‘ராமகிருஷ்ண விஜயம்’ சார்பில் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தர்ஷினி கலைக்கூடம், ராமகிருஷ்ண மடம் போன்ற அமைப்புகள் அப்பாவுக்கு விருது வழங்கி கவுரவித்திருக்கின்றன. புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மண் பெயரிலும் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது, நடிகரும் ஓவியருமான சிவகுமார் அப்பாவை அழைத்து கவுரவப்படுத்தியிருக்கிறார். மற்றபடி தமிழக அரசின் சார்பில் அப்பாவுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை” என்று சொல்லும் ராதா, “அரசு விருதுகளைப் பற்றியெல்லாம் பேச்சு எழும்போது, ‘விருதைத் தேடி நானாகப் போக மாட்டேன். தானாக வரும், கடவுள் கொடுப்பார்’ என்பார். அப்பா இறந்த பின்னர்தான் பத்மஸ்ரீ வழங்கப்பட்டிருக்கிறது. அவரது திறமைக்கும் உழைப்புக்கும் அது கவுரவம்தானே. அதனால், எந்த வருத்தமும் இல்லை. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்” என்கிறார்.

எனினும், கலைஞர்களை அவர்களது வாழும் காலத்திலேயே அரசு கவுரவிக்க வேண்டும். அதுதான் கலைக்குச் செய்யப்படும் உண்மையான மரியாதை!

ஓவியர் சங்கரின் சில ஓவியங்கள்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE