1 - 10 வகுப்புகளுக்கு தாய்மொழிப் பாடம் கட்டாயம்: பாயும் பஞ்சாப்

By எஸ்.சுமன்

பஞ்சாப் மாநிலத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகள் வரை, தாய்மொழியான பஞ்சாபியை கட்டாயப் பாடமாக்கி முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி அறிவித்துள்ளார்.

இதற்கென அமைச்சரவை கூடி எடுத்த முடிவில், உத்தரவை மீறும் கல்வி நிலையங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ’பஞ்சாப் மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பஞ்சாபி மொழி அமலில் இருப்பதுடன், வணிக நிலையங்களின் பெயர்ப் பலகைகளுக்கும் இனி பஞ்சாபி கட்டாயமாகும்’ என்று முதல்வர் சரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையும் ட்விட்டரில் பஞ்சாபி மொழியிலேயே அவர் வெளியிட்டிருக்கிறார். பஞ்சாபி அறியாதவர்களுக்காக அதே பதிவை ஆங்கிலத்தில் பகிர்ந்திருக்கும் சரன்ஜித் சிங், கவனமாக இந்தியை தவிர்த்திருக்கிறார்.

வட இந்தியா என்றாலே இந்தி மயம் என்ற மாயையை உடைத்திருக்கும் பஞ்சாப், இந்தி பரவலால் தங்கள் தாய்மொழி நசிந்துவருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பஞ்சாப்பின் இந்த நகர்வுகள், இந்தி மோகத்தை எதிர்க்கும் இதர மாநிலங்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

இதில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சில அரசியல் கணக்குகளும் இருக்கின்றன. மொழி வழி அரசியலில் மக்கள் ஆதரவை அறுவடை செய்யவும், இந்தியை ஆதரிக்கும் பாஜகவுக்கு நெருக்கடி தரவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE