கங்கனாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைப் பறிக்க வேண்டும்!

By எஸ்.சுமன்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, அரசு திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கொதித்து வருகின்றனர். 1947 தேச விடுதலையை பிச்சை என கங்கனா உச்சரித்ததற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன.

நேற்று பாஜக எம்பியான வருண் காந்தி, நடிகை கங்கனா ரணாவத்தின் ஆட்சேபத்துக்குரிய வீடியோ உரைத்துணுக்கை பகிர்ந்திருந்தார். ’1947-ல் நாம் பெற்ற சுதந்திரம் என்பது பிச்சை என்றும், மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014-ல்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது’ என்றும் அந்த வீடியோவில் கங்கனா பிதற்றி இருந்தார்.

1947-ல் பெற்றது பிச்சை; நிஜமான சுதந்திரம் 2014-ல் கிடைத்தது!

காங்கிரஸ் முன்னெடுத்திருக்க வேண்டிய எதிர்ப்புக் குரலை, ஒரு பாஜக எம்பி வெளியிட்ட பிறகே, காங்கிரஸார் சுதாரித்துக்கொண்டு இன்று(நவ.12) களத்தில் இறங்கினர்.

கட்சியின் செய்தி தொடர்பாளரான கௌரவ் வல்லப், “தனது பேச்சுக்காக கங்கனா உடனடியாக, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றவர், ”பத்மஸ்ரீ விருது வழங்கியதன் மூலம் கங்கனா ரணாவத் போன்றவர்களை அரசு மேலும் ஊக்குவிக்கிறது” என்று பாஜக அரசையும் குற்றம்சாட்டினார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஆனந்த் சர்மா, “குடியரசுத் தலைவர் உடனடியாக கங்கனாவிடமிருந்து பத்மஸ்ரீ விருதை பறிக்க வேண்டும்” என்று டிவிட்டரில் பதிவிட்டு, உடன் ஜனாதிபதி மாளிகையை ’டேக்’ செய்திருந்தார். மேலும், ”இதுபோன்ற நபர்களுக்கு விருதுகளை வழங்குவதற்கு முன்னர், விருதுக்கு தகுதியானவரா என்ற மனநல பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்” என்றும் போட்டுத் தாக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE