மதுரையில் ரத்தான 'அண்ணாத்த' படக்காட்சி

By கே.எஸ்.கிருத்திக்

ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம், மதுரை அண்ணாநகரில் உள்ள தியேட்டர் ஒன்றிலும் ஓடுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 2-ம் ஆட்டம் பார்ப்பதற்காக, ரசிகர்களும், சில குடும்பஸ்தர்களும் படத்துக்குச் சென்றிருந்தார்கள். இரவு 9.30 மணிக்குப் திரையிட வேண்டிய படத்தை 10.30 வரையில் திரையிடாததால், பொறுமையிழந்த ரசிகர்கள் ஆபரேட்டரிடம் போய் முறையிட, இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால், ரசிகர்கள் வாக்குவாதம் செய்து பணத்தைத் திரும்பப் பெற்றார்கள். சிலர் 'பார்க்கிங்' கட்டணத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்கள். ஒரே ஒரு ரசிகர் மட்டும், "நான் எஸ்.ஆலங்குளத்தில் இருந்து படம் பார்க்க வந்துள்ளேன், அதற்கான பெட்ரோல் செலவையும் தந்தால்தான் போவேன்" என்று ரகளை செய்ததால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

"தியேட்டரில் வெறும் 30 ரசிகர்கள் மட்டுமே இருந்ததால்தான், காட்சியை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்கள்" என்று ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்தார்கள். தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்டபோது, "ரசிகர்கள் கூட்டம் குறைவாக இருந்தது உண்மைதான். ஆனால், அதற்காக எல்லாம் காட்சியை ரத்து செய்யவில்லை. சேட்டிலைட் வழியாக வரும் படக்காட்சியை தியேட்டரில் ரிசீவ் செய்து ஒளிபரப்புவதில் ஏற்பட்ட பிரச்சினைதான் படத்தை ரத்து செய்யக்காரணம்" என்று விளக்கமளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE