மிசோரம் தலைமைச் செயலாளரை மாற்றுமாறு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் மாநில முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதற்காக அவர் சுட்டியிருக்கும் காரணம், ஒருவகையில் தமிழர்களுக்கு உவப்பானது!
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இதன் முதல்வராக இருப்பவர் ஸோரம்தங்கா. அண்மையில், மாநிலத்தின் தலைமைச் செயலராக ரேணு சர்மா என்பவர் நியமிக்கப்பட்டார். இதில், முதல்வர் ஸோரம்தங்கா அதிருப்தி அடைந்தார். காரணம், கூடுதல் தலைமைச் செயலர் ஜே.சி.ராம் தங்கா என்பவரை தலைமைச் செயலராக நியமிக்க முதல்வர் விரும்பி இருந்தார்.
இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாக்கு, மிசோரம் முதல்வர் கடிதம் எழுதினார். அதில், “மிசோரம் மாநிலம் உருவானது முதலே, எங்களது மிசோ மொழி அறிந்த ஒருவர்தான் தலைமைச் செயலராக இருந்து வருகிறார். ஏனெனில், மாநில மக்கள் மட்டுமன்றி எங்கள் அமைச்சர்களுக்கும் இந்தி மொழி தெரியாது. ஆங்கிலமும் அரைகுறைதான். ஆனால், தற்போது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் ரேணு சர்மா மிசோ மொழி அறியாதவர். எங்கள் தாய்மொழி அறியாதவரை, உயர் அதிகாரியாக வைத்திருப்பது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே, எங்கள் மாநிலத்துக்கு எங்கள் தாய்மொழியான மிசோ அறிந்த அதிகாரியை தலைமைச் செயலராக நியமிக்கவும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸோரம்தங்கா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.