அகிலேஷ் யாதவின் மணக்கும் தேர்தல் பிரச்சாரம்!

By எஸ்.எஸ்.லெனின்

அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து பார்த்திருப்பீர்கள். உத்தர பிரதேசம் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் தேர்தல் பிரச்சாரம் மட்டும் மணக்க மணக்க நடக்கும்.

ஏனெனில், அகிலேஷ் யாதவ் உட்பட அவர் கட்சியினர் அனைவரது கையிலும் வாசனை திரவியம் எப்போதும் இருக்கும். தேர்தல் பிரச்சாரம் தோறும் சுகந்தம் மணக்கும் அந்த வாசனை திரவிய குப்பிகளை கட்சியினருக்கு விநியோகித்த பின்னரே, காரியத்தில் இறங்குவார் அகிலேஷ். இம்முறையும் அப்படியே மணக்க மணக்க தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷின், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ புஷ்ப்ராஜ் ஜெயின் என்பவர் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கிறார். 2017 உ.பி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஒரே கல்லில் 2 மாங்காயாக அவர் ஒரு காரியம் செய்தார்.

புதிய ரக வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி, சமாஜ்வாடி கட்சியின் அடையாளங்களை அதில் பிரதிபலிக்கும்படி செய்தார். அகிலேஷ் யாதவுக்கு அந்த ஏற்பாடு பிடித்துப்போக, மேற்படி வாசனை திரவியத்தை சந்தோஷமாய் அறிமுகம் செய்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

இம்முறை, அப்படி உருவாக்கப்பட்ட வாசனை திரவியத்தின் பெயரே ‘சமாஜ்வாதி சுகந்த்’! வாசனை திரவியக் குப்பியின் வெளிப்புறச் சித்தரிப்பு, சமாஜ்வாதி கட்சிக்கொடியை பிரதிபலிக்கிறது. ’இதன் நறுமணமோ, சமாஜ்வாதி கட்சியின் பன்மைத்துவ கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான வாசனை இடுபொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது’ என்று சிலாகிக்கிறார் அகிலேஷ் யாதவ்.

சமாஜ்வாதி கட்சியினர் மட்டுமன்றி, அவர்களை கேலியாக இடித்துரைப்பதற்காக பாஜகவினரும் வாங்கிக் குவிப்பதில் இப்படி அறிமுகமாகும் வாசனை திரவியங்களுக்கு வரவேற்பு அதிகம். ஆனால் 2017 தேர்தலில், பாஜகவின் வெற்றிக்கு முன்னர் சமாஜ்வாதி படுதோல்வியடைந்தது வேறு விஷயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE