’அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்தி கோடிக் கணக்கில் கொள்ளையடித்ததே, தற்போதைய சென்னை மழை பாதிப்புகளுக்கு காரணம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், ’ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக ஒப்பந்தக்காரர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் பாய்ந்திருக்கிறார். ஸ்டாலினின் இந்தப் பாய்ச்சல் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை மேலும் இறுகச் செய்யும் என்கிறார்கள் திமுகவினர்.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை 3-வது நாளாக இன்று(நவ.9) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ‘சென்னை வெள்ளக்காடாக மிதப்பதற்கு முந்தைய அதிமுக ஆட்சியே காரணம்’ என்று குற்றம்சாட்டினார்.
‘ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வெற்று விளம்பரம் செய்தவர்கள், திட்டங்களின் பெயரில் கமிஷன் மட்டுமே அடித்திருக்கிறார்கள். விரைவில் விசாரணை கமிஷன் அமைத்து, அதன் முடிவில் தவறிழைத்த ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டில் நீதிமன்றம் மூலமாகவே எஸ்.பி.வேலுமணியை திமுக நெருக்கி வருகிறது. தற்போது, ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தக்காரர்களின் மீதான விசாரணை மூலம் இன்னொரு திசையிலிருந்தும் வேலுமணியை வளைக்க திமுகவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதற்கிடையே வில்லிவாக்கத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் இன்னும் முழுமையடையாது இருக்கிறது. அவற்றை திமுக அரசு விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்” என்றார்.