தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இங்கு 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் இங்கு மீன்பிடித் தொழிலையே பிரதானமாகச் செய்துவருகின்றனர். இருந்தும், இங்கு கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.
நெய்தல் ஆண்டோ என்னும் படைப்பாளி எழுதிய ‘பொன்னுச்சாமி வில்லவராயர் சட்ட மேலவை உரைகள்’ என்னும் புத்தகத்தின் அறிமுகவிழா, நாகர்கோவிலில் நடந்தது. பொன்னுச்சாமி வில்லவராயர் 1962-ம் ஆண்டு, சட்ட மேலவையில் அங்கம் வகித்தவர். தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், அந்நகரத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு ஆற்றியவர். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி வில்லவராயர் 24 வயதிலேயே தூத்துக்குடி நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தூத்துக்குடியில் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய, பெரிய நூற்பாலைகளுக்கான இயந்திரங்கள், தாரங்கதாரா வேதித் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் ஆகியவை தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தபோது, அதைப் பொன்னுச்சாமி வில்லவராயர் தலைமையிலான அவரது ஆட்களே பத்திரமாகக் கரைசேர்த்துக் கொடுத்தனர். காரணம், இப்போதுபோல் துறைமுகத்தின் தரைப்பகுதி வரை கப்பல்கள் வரமுடியாத காலம் அது. கடலின் கரைப்பகுதியில் இருந்து, குறிப்பிட்ட நாட்டிக்கல் தொலைவில் நிற்கும் கப்பலில் இருந்து இயந்திரத்தை தங்கள் விசைப்படகில் ஏற்ற பலரும் தயக்கம் காட்டிய நிலையில், பொன்னுச்சாமி வில்லவராயர் இதைச் செய்திருக்கிறார்.
அவரது மேலவை உரைகளை வாசிக்கும் வாய்ப்பு அந்த புத்தகத்தின் அறிமுகக் கூட்டம் வாயிலாக வாய்த்தது. அதில், ‘கடலில் மாயமாகும் மீனவர்களை விரைந்து தேட வசதியாக டக்கோ விமான வசதியை ஏற்படுத்தவேண்டும்’ என மேலவையில் பல தருணங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் பொன்னுச்சாமி வில்லவராயர். ஆனால், 1962-ல் எதிரொலித்த இந்த உரை, இப்போதும்கூட பிரச்சினைக்கான முடிவாக எட்டப்படாதது துயர்மிகு விஷயம்தான்.
இதுகுறித்து வழக்கறிஞர் திருத்தமிழ்தேவனார் காமதேனுவிடம் கூறும்போது, ‘குமரி மாவட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகள் உள்ளன. தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு வங்கிகளாக மட்டுமே மீனவர்கள் அரசியல் கட்சிகளால் பார்க்கப்படுகிறார்கள். கிள்ளியூர் தொகுதியில் மீனவர்கள்தான் அதிகம். இங்கு மட்டும் 60 ஆயிரம் மீனவர் வாக்குகள் உள்ளன. இதேபோல் குளச்சல், கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதிகளிலும் கணிசமான மீனவர் வாக்குகள் உள்ளன. ஆனால் இங்குள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு பிரதானக் கட்சி கூட மீனவர்களை வேட்பாளராகக் கூட நிறுத்தவில்லை.
அதேபோல் பெரும் காற்று, புயல் ஏற்படும் சமயங்களில் கடலில் மாயமாகும் மீனவர்களை விரைவாக மீட்க இந்தக் காலத்திலும் குமரி மாவட்டத்தில் போதிய வசதிகள் இல்லை. மாயமாகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் வசதி வேண்டும் என்னும் கோரிக்கை 50 ஆண்டுகளாகவே கிடப்பில் கிடக்கிறது. ஓகி புயலின்போது பலரது உயிரிழப்புக்கு இப்படியான வசதி இன்மைதான் தேடுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது சென்னையில் பேய்மழை கொட்டியிருக்கிறது. வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இப்படியான சூழலிலேனும் மீனவர்களின் கோரிக்கையை புரிந்துகொள்ள வேண்டும். சென்னையில் போதிய பாடம் கற்காததால்தான் அந்த மாநகர் மீண்டும், மீண்டும் மிதக்கிறது. இப்போது குமரி, நெல்லை, தூத்துக்குடியை மையப்படுத்தி மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வசதியாக குமரியில் ஹெலிகாப்டர் வசதி அமைக்க வேண்டும். மீனவர்கள், கடல் தொழிலுக்குச் செல்வதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் அந்நியச் செலவாணியை ஈட்டிக்கொடுக்கின்றனர். அரசும், மக்கள் பிரதிநிதிகளும் மீனவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான இதற்கு செவிசாய்க்க வேண்டும்’’என்றார்.
1962-லேயே சட்ட மேலவையில் எதிரொலித்த ஹெலிகாப்டர் வசதி கோரிக்கை, 60 ஆண்டுகளைக் கடந்தும் கோரிக்கையாகவே இருப்பது வேதனையான விஷயம்தான்!