பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

By ரஜினி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிவாரணங்கள் சென்றடைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் தலைமையில் நேற்று (நவ.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களை கண்காணிக்க, சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களோடு ஒருங்கிணைந்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14 ஐபிஎஸ் அதிகாரிகளையும் நியமித்து, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் கூடுதலாக இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரையில், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கண்காணிப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவியாக சஞ்சய் குமார் ஐபிஎஸ் செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

குறிப்பாக திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டறிதல், போக்குவரத்தை சீர்செய்ய திட்டமிடுதல், நிவாரணப் பொருட்கள் ஏற்பாடு செய்தல் என பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE