இளையான்குடி ஒன்றிய பெருந்தலைவர்களாக இருந்த அரணையூர் பழனிச்சாமி அவரது சகலை கே.கே.காசிலிங்கம் ஆகியோர் நிலை பற்றி நேற்று முன் தினம் வெளியான இதற்கு முந்தைய அத்தியாயத்தில் எழுதியிருந்தேன். அதில், காசிலிங்கம் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதாக எழுதி இருந்தேன். அன்புத் தலைவர் சிதம்பரம் அதை படித்தாரா... அல்லது வேறு யாரும் அவருக்கு எடுத்துச் சொன்னார்களா தெரியவில்லை.
நேற்றைய தினம், தலைவர் சிதம்பரம் காசிலிங்கத்தின் வீட்டுக்கே சென்று உடல் நலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். ஆக, காசிலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதே தலைவருக்கு இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. இதை அவரது கவனத்துக்கு கொண்டு செல்லாதது யாருடைய குற்றம்?
சரி, இன்றைய அத்தியாயத்தின் நாயகனைப் பற்றி பார்ப்போம். 1975-ல் இளைஞர் காங்கிரஸின் சிவகங்கை நகரச் செயலாளராக கட்சிக்குள் நுழைந்து, 1984-ல் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினரானவர் கணபதி. 1996-ல் சிவகங்கை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர், பின்னர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் கணபதி.
கணபதி என்று சொன்னால், யாருக்கும் சட்டென தெரியாது. சிவகங்கையில் அவர் நடத்திய அச்சகத்தின் பெயர் சஞ்சய் அச்சகம். அதிலேயும் காங்கிரஸ். அதனால் ‘சஞ்சய் கணபதி’ என்று சொன்னால்தான், காங்கிரஸ்காரர்களுக்கு எல்லாம் தெரியும். மனைவி இந்திரா. மகன் ஜவஹர். மகள் பிரியதர்ஷினி. இந்தக் குடும்பம் காங்கிரஸை எப்படி நேசித்திருக்கிறது என்பதைச் சொல்ல, இதைவிட வேறு ஒப்புமை தேவையில்லை என நினைக்கிறேன்.
மாவட்ட கமிட்டி கூட்டம் என்றால், அனைவரும் அமர்ந்து பேச ஜமுக்காளம் விரிப்பதிலிருந்தே சஞ்சய் கணபதியின் கட்சி சேவை தொடங்கிவிடும். எம்பி, எம்எல்ஏ பதவிகளுக்கெல்லாம் ஆசைப்பட்டதில்லை சஞ்சய். ஆனால், தனது தொகுதியின் எம்பி, எம்எல்ஏ-க்களை உருவாக்கியதில் அணில் அளவுக்கேனும் தன் பங்கு இருக்க வேண்டும் என துடியாய் துடிப்பவர். காவிரி பிரச்சினையின் போது, தலைவர் சிதம்பரத்தை தாக்க சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். அந்தச் சமயத்தில் காரைக்குடியிலிருந்து சிவகங்கை வரை தலைவருக்கு பாதுகாப்புக்காக வந்த போராளிகளில், சஞ்சய் கணபதியும் ஒருவர்
ஒருமுறை, முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்து, "கருவாடு மீனாகாது... கறந்த பால் மடி புகாது. அதுபோல காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வராது" என்று சொன்னார். அதைக் கண்டித்து அவருக்கு எதிராகப் பெரும்படை திரட்டி, கருப்புக்கொடி போராட்டம் நடத்தியவர் கணபதி. இலங்கை தமிழர் விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸுக்கு எதிராக அறிக்கை தாக்குதல் நடத்தியபோதும், அதைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திக்காட்டியவர்.
1996-ல் மூப்பனார் காங்கிரஸை உடைத்து, தமாகா என்ற கட்சியை உருவாக்க நினைக்கிறார் என்றதுமே தனிக்கட்சி கூடவே கூடாது என, தலைவர் சிதம்பரத்திடம் வாதிட்டவர் சஞ்சய் கணபதி.
நிலைமை கைமீறிப் போவது தெரிந்ததும் மூப்பனாரிடமே சென்று பேசிய சஞ்சய் கணபதி, “கருணாநிதியை சாதாரணமாய் எடைபோட்டு விடாதீர்கள். சிவகங்கை பொதுக்கூட்டத்தில், ‘1984 -ல் அன்னை இந்திரா காந்தியிடம் ஒரு நிமிடம் பேச எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டவர்தான் இந்த சிவகங்கை சின்னப் பையன் சிதம்பரம்’ என்று அசிங்கப்படுத்தியவர் கருணாநிதி. அதுபோல, ‘40 சீட்டுக்காக மூப்பனார் என்னிடம் வந்து காத்துக்கிடந்தார்’ என்று நாளைக்கே உங்களையும் அவர் கொச்சைப்படுத்த தயங்கமாட்டார். ஆகவே, கருணாநிதியை நம்பி தனிக்கட்சி தொடங்கும் யோசனையை விட்டுவிடுங்கள் தலைவரே” என்று மன்றாடினார். ஆனாலும் சஞ்சய் கணபதியை முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு, அறிவாலயத்துக்குக் கிளம்பிவிட்டார் மூப்பனார்.
பிற்பாடு தமாகா உருவானாலும் சஞ்சய் கணபதி காங்கிரஸைவிட்டுப் போகவில்லை. இவரை தமாகாவுக்கு இழுக்க, தலைவர் சிதம்பரம் அப்போது ரொம்பவே மெனக்கிட்டார். சிவகங்கை பயணியர் விடுதியில், தமாகா செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அப்போது, தனது காரை அனுப்பி சஞ்சய் கணபதியை அழைத்துவரச் சொல்கிறார் சிதம்பரம். முன்னாள் மானாமதுரை யூனியன் சேர்மன் சுதந்திர பாண்டியனும் முன்னாள் எம்எல்ஏ-வான அண்ணன் கே.ஆர்.ராமசாமியும் தான் சஞ்சயை அழைத்துவரப் போனவர்கள். தலைவர் அழைக்கிறார் என்றதும் தர்க்கம் பண்ணாமல் காரில் ஏறிவிட்டார் சஞ்சய்.
கூட்டத்துக்கு வந்திருந்த அத்தனைப்பேரையும் சாட்சிக்கு வைத்துக்கொண்டு, சஞ்சய் கணபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் தலைவர் சிதம்பரம். “நீங்கள் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர். கவுன்சில் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்களும் அமர்ந்திருந்தால் உங்களுக்கும் அதில் சம்மதம் என்றுதானே கொள்ளமுடியும். ‘கூட்டத்தில் இருந்தேன், ஆனால் எனக்கு தீர்மானத்தில் ஒப்புதல் இல்லை’ என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று தலைவர் கேட்டார்.
அதற்கு சஞ்சய் கணபதி, “இதிலே எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தமாகாவை உருவாக்கும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் இருந்தேன் என்பது உண்மைதான். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் எழுந்து வந்துவிட்டேன். இப்போதும் எனது நிலைப்பாடு அதுதான். ஒருநாள் ஒருபொழுதுகூட காங்கிரஸை விட்டு நான் வரமாட்டேன்” என்று தைரியமாகச் சொன்னார்.
அப்போதும் விடாத சிதம்பரம், “இது ஒரு 2 மாத காலத்துக்கான தற்காலிக ஏற்பாடுதான். ஜெயித்த பிறகு ஒட்டுமொத்தமாக தமாகாவைக் கொண்டுபோய் காங்கிரஸில் இணைத்து விடுவோம்” என்று சொன்னார் . அதற்குப் பொறுமையாக பதில் சொன்ன சஞ்சய், “அப்படியெல்லாம் பதவிக்கு ஆசைப்பட்டு நான் கட்சியைவிட்டு வரமாட்டேன்" என்று அனைவரின் முன்னிலையிலும் முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டார்.
தலைவர் சிதம்பரம் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சஞ்சய் சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கண்ணீர் பொங்கிவர, "என்னையா பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியைவிட்டுப் போறேன்னு சொல்லீட்டீங்க?” என்று தழுதழுத்தார் தலைவர்.
சுதாரித்துக்கொண்ட சஞ்சய் கணபதி, “எல்லாரும் என்னைய மன்னிச்சுருங்க. நான் தலைவரைக் குறிப்பிட்டு அந்த வாரத்தையச் சொல்லலை. என்னளவுக்கு மட்டுமே சொன்னேன். தப்பா இருந்தா எல்லாரும் என்னைய மன்னிச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு நடையைக்கட்டிவிட்டார்.
இந்த நிகழ்வை தலைவர் சிதம்பரம் தான் எழுதிய ‘ 30 நாட்களில் ஒரு முழுப் புரட்சி’ கட்டுரையில், ‘என்னை சஞ்சய் கணபதி சஞ்சலப்படுத்திவிட்டார். கொஞ்சம் சிந்திக்கவும் வைத்துவிட்டார்’ என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
1996 உள்ளாட்சித் தேர்தலில், தமாகாவும் காங்கிரஸுமே சிவகங்கை நகர்மன்ற தலைவர் பதவிக்கு நேரடியாக மோதுகின்றன. தமாகா வெற்றிக்காக தா.கிருட்டிணன் உள்ளிட்ட திமுக தளகர்த்தர்கள் சிதம்பரத்துடன் கைகோத்து, சிவகங்கையில் வீதிக்கு வீதி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனாலும் சிவகங்கையில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்தப் பேச்சின் பின்னணியில், அண்ணன் சஞ்சய் கணபதி போன்றவர்களின் களப்பணி இருந்தது. தலைவர் சிதம்பரத்துக்கே லேசாய் தடுமாற்றம் வருகிறது. அதனால் தான், “பாரே என்னைப் பாராட்டுகிறது. இந்தியா என்னை சீராட்டுகிறது. தமிழகம் தலை நிமிர்ந்து பார்க்கிறது. சிவகங்கையா என்னை கைவிடப்போகிறது?” என்று சிவகங்கை வாக்காளர்கள் மத்தியில் அவரைப் பேசவைக்கிறது. எனினும் அன்றைக்கிருந்த ஆளும்கட்சி செல்வாக்கை எல்லாம் தாண்டி, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அப்போது வெற்றிவாய்ப்பை இழந்தது காங்கிரஸ்.
துணிச்சலுக்குப் பேர்போன சஞ்சய் கணபதி, திராவிட கட்சிகளே மிரளும் அளவுக்கு சிலபல காரியங்களைச் செய்தவர். சர்ச்சையான சூழலில், ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராக ஆளுநர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது, அதை எதிர்த்துக் கிளம்பினார் சஞ்சய். ‘இது சட்டவிரோதமான பதவியேற்பு. மகாபாரத திரௌபதி போல அரசியல் சட்டம் அசிங்கப்படுகிறது. இந்த நாள் துன்ப நாள். துக்க நாள். துயர நாள்’ என்று தனது அச்சகத்திலேயே போஸ்டர் அடித்து ஆட்களை அனுப்பி, அதை தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒட்டவைத்தார், அப்போது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சஞ்சய் கணபதி.
இந்தப் போஸ்டரைப் பார்த்துவிட்டு, ஒட்டுமொத்த அதிமுக முகாமே சூடாகிப் போனது. அதிமுகவில் அப்போதிருந்த டெரர் மாவட்டச் செயலாளர்கள் சிலர், “யாரந்த சஞ்சய் கணபதி... இன்னுமா இவனை விட்டுவைத்திருக்கிறீர்கள்? எங்கள் ஊராக இருந்தால் நடப்பதே வேறு’ என்று சிவகங்கை நகர அதிமுக செயலாளராக இருந்த கடலைக் கடை பாண்டியை கடைந்தார்கள்.
சஞ்சயைப் பற்றி பாண்டிக்கு தெரியும் என்பதால், அவரால் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. சஞ்சயை அழைத்து, “நீங்கள் இப்படி எல்லாம் செய்து கொண்டிருந்தால் ஆளுங்கட்சியான நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று தனது இயலாமையை வார்த்தைகளாய் வெளிப்படுத்தினார். போஸ்டர் புரட்சி தொடர்பாக அப்போது சஞ்சய் கணபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் விசாரணை நடந்தது. அந்த விசாரணை முடிவதற்குள் ஜெயலலிதா பதவியிழந்தது தனிக்கதை.
இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், சஞ்சய் கணபதியைத் தேடி அவரது வீட்டுக்கே வந்தார் திமுகவின் தென் மண்டல செயலாளராக இருந்த தா.கிருட்டிணன். சஞ்சய்க்கு சால்வை போர்த்திய அவர், “நாங்க மிகப்பெரிய இயக்கம். நாங்களே ஜெயலலிதா பதவியேற்பைக் கண்டிக்கிற விதமா வெளிப்படையா எதிர்ப்பைக்காட்ட முடியல. ஆனா நீங்க, தனி ஒரு ஆளா போஸ்டர் ஒட்டியே அதிமுகக்காரங்கள அலறவிட்டுட்டீங்க” என்றார்.
கண்துஞ்சா களப்போராளியான சஞ்சய் கணபதி, கட்சிப்பணிக்காக திருமாஞ்சோலைக்கு ஆட்டோவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த தலைவர் சிதம்பரம், உடனே அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரைத் தொடர்புகொண்டு தரமான சிகிச்சைக்கு பரிந்துரைத்தார். மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டார். தலைவர் சிதம்பரம் தன் மனதுக்கு நெருக்கமான மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே இந்த அளவுக்கு மெனக்கிடுவார். அந்த சொற்பமானவர்களில், சஞ்சய் கணபதிக்கும் ஓரிடம் வைத்திருந்தார் என்பதற்கு இது ஒன்றே சான்று.
பிராமண சமூகத்தில் பிறந்துவிட்டு, இப்படி காங்கிரஸ் பேரியக்கத்துக்காகவே உழைத்து உழைத்து ஓடாகிப்போன ஒருவரை சமீபகாலத்தில் நான் கேள்விப்பட்டதில்லை. உயிரைக் கொடுத்து உழைத்தாலும் உயர் பதவி எதுவும் கேட்கவில்லை சஞ்சய் கணபதி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிவிட வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாள் லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அன்புத் தலைவர் சிதம்பரம் நினைத்தால், தனது பாசத்துக்குரிய சஞ்சய் கணபதிக்கு அந்த அந்தஸ்தைப் பெற்றுதரமுடியாதா?
(அரசியலில் அன்புத் தலைவர் சிதம்பரம் உச்சத்தில் இருந்த காலத்தில், கார்த்தி சிதம்பரம் நேரடிப் பார்வைக்கு வரமாட்டார். மேடைக்கு பின்னாலோ முன்னாலோ கூட்ட மறைவில் நின்றுகொண்டு, அப்பாவின் செல்வாக்கு குறித்து கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டிருப்பார். அப்படி திரைமறைவில் இருந்த கார்த்தியை, முதன்முதலில் மேடையேற்றினார் ஒருவர். அப்படிப்பட்ட மெய் அன்பரையும் நாங்கள் மாற்றுக் கட்சிக்கு மடைமாற்றிவிட்டோம். அதுபற்றி அடுத்து பார்ப்போம்!)
முந்தைய அத்தியாயத்தை படிக்க:
சிவகங்கையும் சிதம்பரமும்... 20