அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனடிப்படையில் தமிழகக் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ’ஆபரேஷன் ஜாப் ஸ்கேம்’ என்ற பெயரில், வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த கும்பலை கைது செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாகப் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக 58 வழக்குகள் பதிவுசெய்த போலீஸார், 30 பேரை கைது செய்தனர். இதில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இந்த மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்ரி, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் 3-வது மனைவி ராணி எலிசபெத், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தனக்குத் தெரியும் எனக்கூறி வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஹரிநாத் மற்றும் தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் உட்பட 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்கள் குறித்த விவரங்களை, கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-28447701, 28447703, மாநில கட்டுப்பாட்டு அறை எண் 044-23452359 மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண் 044-23452380 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.