சிவகங்கையும் சிதம்பரமும்... 19

By ஒய்.பழனியப்பன் - காங்கிரஸ்

எழுத்துச் சுதந்திரமும் மனதில் பட்டதை எழுந்துநின்று எடுத்துச் சொல்லும் ஜனநாயகமும் நிறைந்துள்ள ஒரே கட்சி, காங்கிரஸ் பேரியக்கம் என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பரிசீலனைக்கான பட்டியலில், தங்கள் பெயரும் இருப்பதையே தனிப்பெரும் தகுதியாக நினைப்பவர்கள் காங்கிரஸில் இன்றைக்கும் இருக்கிறோம். ஆனால், அப்படி நினைத்துப் பெருமைப்பட்ட ஒருவர் பெரும்பாடுபட்ட கதையை இன்று பார்ப்போம்.

தனது 40 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில், 5 ஆண்டுகள் தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அண்ணன் வேலுச்சாமி. ஒருமுறை தேவகோட்டை நகர்மன்றத் துணைத் தலைவராகவும் பிறகு நகர்மன்றத் தலைவராகவும் தன்னுடைய பணிகளை திறம்படச் செய்து முத்திரை பதித்தவர். இப்போது நேரடியாக எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும்கூட, தேவகோட்டை மக்களுடனும் அங்குள்ள காங்கிரஸ்காரர்களுடனும் தொடர்பில் இருப்பவர் வேலுச்சாமி. அதுமட்டுமின்றி தமிழகத்தின் லீடிங் ரோடு கான்ட்ராக்டர்களுள் ஒருவர்.

வேலுச்சாமி

எந்த இடத்திலும் யாருடனும் எப்போதும் எந்தவித முரண்பாடும் இல்லாமல் அரசியல் செய்யவும், தொழில் செய்யவும் விரும்பும் குணாதிசயம் கொண்டவர் வேலுச்சாமி. அவரையும் தான் நம்மவர்கள் போட்டுப்பார்த்துவிட்டார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலில், கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்புத் தர டெல்லி காங்கிரஸ் தலைமை சற்றே யோசித்தது. அந்த சமயத்தில் சிவகங்கை வேட்பாளராக இவர்தான் வருவார் என அனைத்து மீடியாக்களிலும் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட்ட பெயர் வேலுச்சாமி. ஒருசில பத்திரிகைகள் படம் போட்டு செய்திகளும் வெளியிட்டதால் நிலவரம் மேலும் கலவரம் ஆனது.

இப்போது மட்டுமல்ல, 1996-ல் வேலுச்சாமி தமாகாவுக்கு போயிருந்த நிலையில்கூட, அப்போதும் அவர்தான் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் என்ற பேச்சு அலையடித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அப்போது வேலுச்சாமி தமாகாவிலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில், 2019-ல் மீண்டும் அவர் பெயர் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலுக்குப் போனது என்பதில் பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. சிவகங்கை அரசியல் சிந்தாந்தம் தெரிந்தவர்களும் காங்கிரஸ் அரசியலைக் கரைத்துக் குடித்தவர்களும்கூட, இதற்கு விடை தெரியாமல் தடுமாறினார்கள். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியில் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக ஒருவருடைய பெயர் உச்சரிக்கப்படுகிறது என்றால், அவர் அவ்வளவு சாதாரணமானவராக இருக்க முடியாது என்பதே கடந்தகால நிலவரம்.

கார்த்தி சிதம்பரம்

இருந்த போதும் கடைசி நேர காய்நகர்த்தல்களால் வேலுச்சாமியின் பெயர் பின்னுக்குத்தள்ளப்பட்டு, இளைய நிலா கார்த்தி சிதம்பரமே 2019-ல் சிவகங்கைக்கு வேட்பாளராகிவிட்டார். இதைத் தொடர்ந்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்குடி தொகுதிக்கு வேலுச்சாமியின் பெயர் பலமாக அடிபடத் தொடங்கியது. 2 பேர் கொண்ட இறுதிப் பேனலுக்கும் (பட்டியலுக்கும்) வேலுச்சாமியின் பெயர் வந்துவிட்டது. அப்போது தனது நண்பர் (மறைந்த) கோவிந்தன் மூலமாக தலைவர் சிதம்பரத்திடம் பேசி, தனக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத்தரக் கோருகிறார் வேலுச்சாமி. தலைவர் சிதம்பரம் மீது வைத்திருக்கக்கூடிய அலாதி பிரியமும் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவும் தனக்கு தலைவர் சிதம்பரம் அந்த வாய்ப்பைப் பெற்று தருவார் என உறுதியாக நம்பினார் வேலுச்சாமி. ஆனால், இப்போதும் காற்று வேறுபக்கம் அடித்துவிட்டது. மாங்குடி வேட்பாளர் ஆனார்.

வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தேர்தல் பிரச்சாரத்துக்காக தேவகோட்டை வந்த தலைவர் சிதம்பரத்தை, காங்கிரஸ் தொண்டர்கள் கெரோ செய்து சிறைவைத்த போதுதான், பலருக்கும் வேலுச்சாமியின் செல்வாக்கும் ஆள் பலமும் என்னவென்று புரிந்தது; தெரிந்தது.

தொடர் தோல்விகளும், தடைகளும், போராட்டங்களும் ஏமாற்றங்களும் தான் பல அரசியல் தலைவர்களை உருவாக்கியதாகச் சொல்வார்கள். அந்த வகையில், அண்ணன் வேலுச்சாமியின் பெயர் பாராளுமன்ற வேட்பாளர் பரிசீலனைப் பட்டியல் வரை வந்ததை சிலரால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. பின்னே... என்னுடைய வீட்டுக்குள் நீங்கள் குடியேற நினைத்தால் நான் சும்மா இருப்பேனா? சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவருக்கான வாய்ப்பை சாதுர்யமாய் தட்டிவிட்டார்கள்.

அந்தக் கோபமோ என்னவோ தெரியவில்லை... அண்ணன் வேலுச்சாமியின் மகன் சுதாகர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சென்றுவிட்டார். மகனைத் தொட்டு வேலுச்சாமியும் திமுக போய்விடுவார் என்று பலபேர் சொன்னார்கள். என்னிடமும் சிலர் உறுதியாகவே சொன்னார்கள். நான்கூட அதை நம்பினேன். காரணம், அவருக்கு நெருக்கமான உறவினர்கள் இருவர் திமுக அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, என்றைக்காக இருந்தாலும் நான் காங்கிரஸ்தான் என்று பலருக்கும் உரக்கச் சொல்லி, பாந்தமான தனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறார் அண்ணன் வேலுச்சாமி.

(காங்கிரஸை நேசித்த சகலைகளின் சாத்தியமாகாத அரசியல் வரலாற்றை அடுத்து பார்ப்போம்!)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 18

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE