குரூப் 4 தேர்வெழுதியவர்களை கொட்டிய தேனீக்கள்: அரை மணி நேரம் தேர்வு பாதிப்பு @ அரூர்

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர் அருகே குரூப் 4 தேர்வு எழுதிவந்தவர்களை தேனிக்கள் கொட்டியதால் அவர்கள் காயமடைந்தனர். இதனால் அரை மணி நேரம் தேர்வு பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நடந்தது. இம்மையத்தில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 300 பேர் தேர்வெழுத வந்திருந்தனர். இந்நிலையில் தேர்வு தொடங்கவிருந்த நேரத்தில் அம்மையத்தில் அறை எண் 5- ல் கண்காணிப்பு பணியில் இருந்த ஜெயவேல் என்பவர் அறையிலிருந்த ஜன்னல் கதவினை திறந்தார். அப்போது கதவின் பின்புறம் இருந்து தேனீக்கள் அறையில் புகுந்து, கண்காணிப்பாளர் ஜெயவேல் மற்றும் அந்த அறையில் தேர்வு எழுத வந்த தேர்வர்கள் சுமார் 10 பேரையும் கொட்டத் தொடங்கிது.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற தேர்வர்கள் அறையை விட்டு வெளியேறினர். இதனால் அங்குள்ள மற்ற அறைகளிலும் தேர்வு பணி தடைப்பட்டது, இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தேர்வு மைய அலுவலர்கள் இதுகுறித்து வட்டாட்சியர், அரசு மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவக் குழுவினர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தனர். பின்னர் அரூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் அங்கு நேரில் வந்து நடந்த சம்பவத்தை விசாரித்து மாற்று அறைக்கு ஏற்பாடு செய்தார்.

தொடர்ந்து இது குறித்து சென்னை டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தாமதமான நேரத்திற்கு இணையாக அம்மையத்தில் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மட்டும் கூடுதலாக அரை மணி நேரம் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் தேர்வு எழுதினர். தேர்வு முடியும் வரை அங்கு மருத்துவ குழுவினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE