தீபாவளிக்கு ரூ.550 கோடியை அள்ளக் காத்திருக்கும் டாஸ்மாக்

By எஸ்.சுமன்

தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த ’பார்’ திறப்புக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. பண்டிகை கால நெரிசலால் பெருந்தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயமிருக்க, பார்களின் திறப்பு அந்தக் கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

டாஸ்மாக்

நவ.1 முதல் முழுமையான பள்ளித் திறப்பு நடைமுறைக்கு வருகிறது. பண்டிகை நெருக்கத்தில் பள்ளிகள் திறப்பது தொற்றுப் பரவலை அதிகரிக்கலாம் என்று பெற்றோர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டதில், சில தனியார் பள்ளிகள் தங்களது திறப்பை நவ.8-க்கு ஒத்தி வைத்துள்ளன. ’பள்ளி திறந்ததுமே குழந்தைகளை அனுப்புவது கட்டாயமல்ல; பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது குறித்து பெற்றோரே முடிவெடுக்கலாம்’ என்று அரசு தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது. இதற்கு, தீபாவளிக்கு திமிறும் கூட்ட நெரிசல் மட்டும் காரணமல்ல; பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான மக்கள், பயணங்களை மேற்கொள்வதும் தொற்றுப் பரவலை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் ஒரு காரணம்.

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக வீட்டிலிருந்துவிட்டு, பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விக்கே இவ்வளவு தயங்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதுநாள் வரை அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் பார்களை, தீபாவளி விற்பனையை குறிவைத்து மீண்டும் திறந்துவிட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலை தந்திருக்கிறது.

டாஸ்மாக் கடைக்கான வரிசை

தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பின்றி பார்கள் செயல்பட, டாஸ்மாக் நிர்வாகம் பல வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி பராமரிப்புடன், பார்களுக்கு வருவோருக்கு உடல் வெப்ப அளவீடு பரிசோதிப்பது, சோப் போட்டு கை கழுவுவது ஆகியவையும் அவசியம் என்கிறது அந்த வழிகாட்டுதல். கூடவே, வாடிக்கையாளர்களின் சுய விபரக் குறிப்பு பராமரிப்புக்காக தனியாக ஏடு பராமரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. சுத்தம் என்றால் எத்தனை மில்லி என்று விசாரிக்கும் அளவுக்கு மோசமாக இருக்கும் டாஸ்காக் பார்களில், இதெல்லாம் நடக்கிற கதையா என குடிப்பிரியர்களே விசாரிக்கும் அளவுக்கு இந்த வழிகாட்டுதல்கள் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளன.

தீபாவளி என்றாலே வருடந்தோறும் டாஸ்மாக் வருமானம் அள்ளும். 2019 தீபாவளியை முன்னிட்டு கணக்கிடப்படும் 2 நாள் தமிழக டாஸ்மாக் மதுவிற்பனை சாதனை ரூ.355 கோடி. அடுத்து வந்த 2020-வது வருடத்தில், கரோனா களேபரத்துக்கு மத்தியிலும் டாஸ்மாக் வருமானம் ரூ.466 கோடி. அதன்படி இம்முறை குறைந்தது ரூ.550 கோடிக்கு டாஸ்மாக் விற்பனை சாதனை படைக்கும்.

இந்த விற்பனையில் பங்கம் விழுமோ என்ற கவலையில், பார்களை திறக்க அனுமதித்திருக்கிறார்களா என்ற ஐயமும் எழுகிறது. இவற்றுடன், தீபாவளி சிறப்புச் சாலை விபத்துகள் குறித்தும் பொதுமக்கள் தங்கள் கவலைகளை சமூக ஊடகங்களில் பதிந்து வருகிறார்கள். கரோனா காரணமாக நசிந்த வேலைவாய்ப்பும், வருமானமும் இப்போதுதான் துளிர்த்து வருகின்றன. தீபாவளி மட்டுமன்றி தொடரும் நாட்களிலும் பார் திறப்பு தொடருமெனில், குடியில் விழும் தொழிலாளர் குடும்பங்கள் கால்வாரலுக்கு ஆளாகும்.

ஏட்டளவில் இருக்கும் பார் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாகக் கடைபிடிப்பதுடன், கோயில் தரிசன வரிசைகளை விஞ்சும் டாஸ்மாக் கடைகளுக்கான கூட்ட நெரிசலையும் தனிநபர் இடைவெளியுடன் முறைப்படுத்துவதும் தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதில் கவனக்குறைவானால் பண்டிகைக்குப் பிறகு, மக்களின் மருத்துவக் கவலைகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE