சீறும் அண்ணாமலை... சிறக்கும் செந்தில் பாலாஜி!

By கரு.முத்து

திமுக அரசு மீதும், அதன் அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்காய் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்திவருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. குறிப்பாக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுதான் அண்ணாமலை அதிகமாகப் புகார் பத்திரம் வாசிக்கிறார். அவருக்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “அண்ணாமலை சொன்ன புகார் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும், அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று சவால் விட்டார். இருவருக்கிடையேயான இந்தச் சவால், ‘நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்வோம்’ என்ற அளவில் தற்போது வளர்ந்து நிற்கிறது.

அண்ணாமலை

அண்ணாமலைக்கும் செந்தில் பாலாஜிக்குமான இருமுனையில் நடைபெற்ற இந்த விவகாரத்தில், தற்போது 3-வது முனையும் முளைத்திருக்கிறது. அண்ணாமலையின் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஜிஆர் நிறுவனம், தங்கள் பெயரைக் குறிப்பிட்டதற்காக அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு அண்ணாமலை, தன்னிடம் ஒருசில ஆடுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நக்கலாக பதில் அளித்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும்!

அண்ணாமலையின் முதல் குறி, அதிலும் முக்கிய குறியாக ஏன் செந்தில் பாலாஜி இருக்கிறார்? அதற்குக் காரணம், செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை அடங்காத கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தனது கனவுகளைத் தகர்த்த செந்தில் பாலாஜியை, அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதே அண்ணாமலையின் நோக்கம் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கர்நாடகாவில் தெற்கு பெங்களூருவின் காவல் துறைத் துணை ஆணையராக வலம்வந்த அண்ணாமலையை, ராஜினாமா செய்யவைத்து, தமிழகத்தில் அவரது கம்பீர பிம்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டது. அப்படித்தான் ஐபிஎஸ் பணியை உதறிவிட்டு ஆடு வளர்க்கும் தொழிலுக்கு வந்தவராகச் சித்தரிக்கப்பட்டார் அண்ணாமலை. பலரும் எதிர்பார்த்தது போலவே விரைவில் தமிழக பாஜகவில் அவர் இணைந்தார். அவரது ‘கர்நாடக சிங்கம்’ இமேஜ், தமிழகத்திலும் நிச்சயம் பிரதிபலிக்கும் என்று நம்பியது பாஜக. அண்ணாமலையும் அந்தக் கனவோடுதான் இருந்தார். மாநில துணைத் தலைவர் பதவியையும் அவருக்கு அளித்து ஆச்சரியப்படுத்தியது பாஜக.

சட்டப்பேரவைத் தேர்தலில், தனது சொந்த ஊர் அடங்கிய அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை களமிறங்கினார். அங்கே இடைத்தேர்தலில் வென்றிருந்த செந்தில் பாலாஜி திரும்பவும் நிற்கும்பட்சத்தில் அவரை எதிர்த்து நின்று வென்றால், தனக்கு தமிழக அரசியல் களத்திலும், பாஜகவிலும் தனி அங்கீகாரம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டிருந்தார் அண்ணாமலை. அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியே போட்டியிட வேண்டும் என்று சவால் விடுத்தும் பார்த்தார். ஆனால், செந்தில் பாலாஜி அங்கே களமிறங்கவில்லை. செந்தில் பாலாஜியின் கணக்கு, அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வீழ்த்துவதாக அமைந்திருந்தது. அதனால், கரூரில் அவர் களமிறங்கிக்கொண்டு அரவக்குறிச்சியில் இளங்கோ என்பவரை நிறுத்தினார்.

முதல்வருடன் செந்தில் பாலாஜி

சரி, சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அண்ணாமலை, இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள பல இடங்களில் உள்ளே நுழையமுடியாமல் தவித்தார். மேலும், சில இடங்களில் அவருக்கு சரியான வரவேற்பும் இல்லை. அதற்கெல்லாம் செந்தில் பாலாஜியின் திறமைமிக்க களப்பணிதான் காரணம் என்பதை உணர்ந்துகொண்டார். அதனால் அவர் மீது ஆத்திரம் கொண்டார். மிகக் கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், “தூக்கிப்போட்டு மிதித்துவிடுவேன்” என்றும்கூட பொதுவெளியில் பேசினார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்துகொடுக்காத செந்தில் பாலாஜி, தனது அரசியல் சாதுரியத்தால் அண்ணாமலையை அரவக்குறிச்சியில் தோல்வியுறச் செய்தார். தனது அரசியல் கனவு கலைய காரணமான செந்தில் பாலாஜிமீது அண்ணாமலை கடும்கோபம் கொண்டார். அடுத்தபடியாக எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகிவிட, அண்ணாமலைக்கு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு தேடிவந்தது. ’’தலைவரானதில் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும் அரவக்குறிச்சி தோல்வி அவரது அடிமனதில் ஆத்திரமாய் கனன்றுகொன்டே இருந்தது. சமயம் வரட்டும் என்று காத்திருந்தார். இப்போது சமயம் வாய்த்திருக்கிறது. பயன்படுத்திக்கொள்கிறார்” என்கிறார்கள் அரவக்குறிச்சி பாஜகவினர்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் கனவைக் கலைத்த செந்தில் பாலாஜி, தனது அடுத்தடுத்த கனவுகளையும் கலைத்துவிடுவார் என்ற அச்சமே அண்ணாமலையின் கோபத்துக்கு மேலும் எண்ணெய் ஊற்றியது என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு கோவை மேயர் உட்பட பல திட்டங்களை அண்ணாமலை போட்டு வைத்திருக்கிறார். உள்ளாட்சிப் பதவிகளில் பாஜகவினரை அமர வைப்பதன் மூலம் கட்சியின் அடித்தளத்தை நன்கு கட்டமைத்து விடலாம் என்று திட்டம் வகுத்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடலாம் என்பதும் அவரது எண்ணமாக இருக்கிறது என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி

அவரது இந்தக் கனவையும் தகர்க்கும் வகையில் இருக்கிறது திமுக தலைமையின் அறிவிப்பு. கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் எம்எல்ஏ-க்கள் இல்லாததால், கோவைக்கான பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்திருக்கிறது திமுக. இது, அண்ணாமலையை இன்னும் உக்கிரமாக்கிவிட்டது என்கிறார்கள்.

அரசியல் சாதுர்யம் கொண்ட செந்தில் பாலாஜி, கோவையில் பாஜகவை ஆட்டம் காண வைத்துவிடுவார் என்று அண்ணாமலை கருதுகிறாராம். அப்படி பாஜக கலகலத்துவிட்டால் கட்சியை வளர்த்தெடுப்பது, மேயர், எம்பி உள்ளிட்ட தனது கனவுகளும் கலைந்துபோய்விடும் என்பது அவரது கவலை. அதனால்தான் செந்தில் பாலாஜியைக் குறிவைத்துத் தாக்குகிறார் என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, ‘’ தனது இருப்பைக் காட்டிக்கொள்ள அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடனேயே அமைச்சர் பதில் அளித்துவிடுகிறார். அதற்கு அண்ணாமலையால் பதில் கூற முடியவில்லை. எனவே அவர் கூறுவது பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டு விட்டார்கள். கரூரில் ஒரு மாவட்டச் செயலாளராகத் தனது கடமையைச் செவ்வனே செய்து, மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளையும் திமுக கூட்டணியை வெற்றிபெற வைத்தார் செந்தில் பாலாஜி. அவரது செயல்திறன் மீது நம்பிக்கை வைத்து தற்போது கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக அவரை நியமித்திருக்கிறார் தளபதி. அங்கும் தனது திறமையை நிரூபித்துக் காட்டுவார். இதற்கெல்லாம் அண்ணாமலைக்கு ஆத்திரம் வந்தால் நாங்கள் என்ன செய்வது” என்கிறார்கள்.

செந்தில் பாலாஜியின் மீதான அண்ணாமலையின் கோபம் குறித்து பாஜக தரப்பில் கேட்டபோது, “எந்தத் துறையில் தவறுகள் நடப்பதாகத் தெரியவந்தாலும், அதுகுறித்து விவாதித்து அதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் பாஜகவுக்கு இருக்கிறது. அதைத்தான் அண்ணாமலை செய்துகொண்டிருக்கிறார். மின் துறை மட்டுமல்லாது மற்ற துறை அமைச்சர்கள் குறித்தும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அப்படிச் சுட்டிக்காட்டுவதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள்.

பல்வேறு விதத்தில் விளக்கங்கள் வந்தாலும், மின் துறை அமைச்சர் மீதான அண்ணாமலையின் கோபம் மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது மட்டும் உண்மை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE